பாதுகாப்புத் துறை செயற்கை நுண்ணறிவு: ஐஐடி மெட்ராஸ் - மெதாஸ்த்ரா ஒப்பந்தம்.

பாதுகாப்புத் துறை செயற்கை நுண்ணறிவு: ஐஐடி மெட்ராஸ் - மெதாஸ்த்ரா ஒப்பந்தம்

     சென்னை, அக்டோபர் 2026: இந்தியத் தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸின் தொழில்நுட்பப் புத்தாக்க மையமான ஐஐடிஎம் பிரவர்தக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளை, பாதுகாப்புத் துறையில் உள்நாட்டிலேயே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதை ஊக்குவிக்கும் நோக்கில், மெதாஸ்த்ரா டெக்சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

      ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்த ஒப்பந்த நிகழ்வில், ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, ஐஐடிஎம் பிரவர்தக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் டாக்டர் எம். ஜே. சங்கர் ராமன் ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மெதாஸ்த்ரா நிறுவனத்தின் பாதுகாப்புத் துறை முதன்மை ஆலோசகரான ஓய்வுபெற்ற வான்படைத் துணைத் தளபதி ஆர். குருஹரியும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.

கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் உருவாகும் நவீனத் தொழில்நுட்பங்களை நடைமுறைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் திறன்கொண்ட ஆழ்நிலைத் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்தும் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. 

    இதன்படி, இந்திய ஆயுதப் படைகளின் தேவைகளுக்குப் பயன்படக்கூடிய, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு நேரடிப் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்கும் நோக்கில், ஐஐடிஎம் பிரவர்தக் மற்றும் மெதாஸ்த்ரா நிறுவனங்கள் பல்வேறு செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களில் இணைந்து செயல்பட உள்ளன.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆழ்நிலைத் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை நடைமுறைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் ஒருங்கிணைந்துள்ள ஐஐடி மெட்ராஸ் புத்தாக்கச் சூழலமைப்பில் மெதாஸ்த்ரா நிறுவனமும் இணைகிறது. இதன் மூலம், ஐஐடி மெட்ராஸின் ஆராய்ச்சி நிபுணத்துவம் மற்றும் புத்தாக்க வலையமைப்பை நெருக்கமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு மெதாஸ்த்ரா நிறுவனத்துக்குக் கிடைக்கும். கூட்டு ஆராய்ச்சி, பேராசிரியர்களுடனான ஒத்துழைப்பு, ஆய்வக வசதிகளைப் பயன்படுத்துதல் மற்றும் மாணவர்களின் பங்கேற்பு உள்ளிட்ட வாய்ப்புகள் மூலம், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகள் மேலும் வலுப்பெறும்.

    ஐஐடிஎம் பிரவர்தக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் டாக்டர் எம். ஜே. சங்கர் ராமன் கூறியதாவது:

“இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் தன்னிறைவை வலுப்படுத்தும் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை வளர்ப்பதில் ஐஐடிஎம் பிரவர்தக் உறுதியாகச் செயல்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, பாதுகாப்புத் துறையில் இந்தியா தனது சொந்தத் தொழில்நுட்பத் திறனை உருவாக்கிக்கொள்ள வேண்டியது அவசியம். ஐஐடி மெட்ராஸ் புத்தாக்கச் சூழலமைப்புக்கு மெதாஸ்த்ரா நிறுவனத்தை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி வலிமையையும், பாதுகாப்புத் துறைக்கான தீர்வுகளை உருவாக்குவதில் மெதாஸ்த்ரா கொண்டுள்ள கவனத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலம், ஆய்வகங்களில் உருவாகும் தொழில்நுட்பங்களை நடைமுறைப் பயன்பாட்டுக்குக் கொண்டுசெல்லும் செயல்முறையை விரைவுபடுத்தி, தற்சார்பு இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்குப் பங்களிக்க விரும்புகிறோம்.”

மெதாஸ்த்ரா டெக்சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் அபினவ் வர்மா காளிதிண்டி கூறியதாவது:

“ஐஐடி மெட்ராஸ் புத்தாக்கச் சூழலமைப்பில் இணைவது மெதாஸ்த்ரா நிறுவனத்துக்குப் பெருமைக்குரிய தருணமாகும். இந்திய ஆராய்ச்சிகளை நடைமுறைப் பயன்களாக மாற்றுவதில் ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடிஎம் பிரவர்தக் ஆகியவை முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. தொலைநோக்குப் பார்வையுடனும் எங்கள் மீது நம்பிக்கை வைத்தும் செயல்பட்ட பேராசிரியர் காமகோடி மற்றும் டாக்டர் சங்கர் ராமன் ஆகியோருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களுடன் இணைந்து, இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்படும் தற்சார்புமிக்க பாதுகாப்புச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்பை வலுப்படுத்தும் மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டத்துக்கு ஏற்ப, உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காகக் கல்வி நிறுவனங்களும் இந்தியத் தொழில்துறையும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான முயற்சிகள் அதிகரித்து வருவதை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் எடுத்துக்காட்டுகிறது.