கோவை மாநகர காவல் ஆணையரிடம் இந்து முன்னணி சார்பில் புகார் மனு...

கோவை மாநகர காவல் ஆணையரிடம் இந்து முன்னணி சார்பில் புகார் மனு.

 கோவை, அக். 22-
சமூக வலைதளங்களில் இந்து மதக் கடவுள்கள், இந்துக்களின் மத நம்பிக்கைகள், கோயில்கள் மற்றும் இந்து முன்னணி பேரியக்கம் குறித்து இழிவான மற்றும் அவதூறான கருத்துகளைப் பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து முன்னணி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
     இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். சதீஷ் அளித்த புகார் மனுவில், Instagram, Facebook உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்து மதக் கடவுள்கள், மத நம்பிக்கைகள், கோயில்கள் மற்றும் இந்து முன்னணி பேரியக்கம் குறித்து இழிவுபடுத்தும் வகையில் காணொளிகளும் கருத்துகளும் பரப்பப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்து மதத்தினர் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்புவதன் மூலம் மத உணர்வுகள் புண்படுவதுடன், சமூகத்தில் மத நல்லிணக்கத்திற்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகுவதாகத் தெரிவித்துள்ளார்.
        எனவே, சம்பந்தப்பட்ட சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் காணொளிகளை ஆய்வு செய்து, அவற்றைப் பதிவிட்ட நபர்களைக் கண்டறிந்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் புகார் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
       இதில் இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் தசரதன், கோவை கோட்டச் செயலாளர் பாபா கிருஷ்ணன், உருவை பாலன், குணா, மாவட்ட செய்தித் தொடர்பாளர் தனபால், மாவட்டப் பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், மாவட்டச் செயலாளர்கள் ஆறுச்சாமி, மகேஸ்வரன், தம்பி சரவணன், சோமசுந்தரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.