கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளை கண்காணித்தல், மீட்பு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளுதல் குறித்து த.மோகன் தலைமையில் ஆய்வுக்கூட்டம்...

கடலூர் மாவட்டத்தில் 
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளை கண்காணித்தல், மீட்பு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளுதல் குறித்து  த.மோகன்  தலைமையில் ஆய்வுக்கூட்டம்

கடலூர், அக்.25-
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளை கண்காணித்தல், மீட்பு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளுதல் குறித்து அரசு கூடுதல் செயலாளர் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை/மாவட்ட கண்காணிப்பு அலுவலர்  த.மோகன்  தலைமையில்,  மாவட்ட ஆட்சித்தலைவர்  சிபி ஆதித்யா செந்தில்குமார்  முன்னிலையில் இன்று (25.10.2026) அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

   இக்கூட்டத்தில் அரசு கூடுதல் செயலாளர் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை/ மாவட்ட கண்காணிப்பு அலுவலர்  தெரிவித்ததாவது,
 தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். 
   
         அதன்படி, கடலூர் மாவட்டத்தில் 22 இடங்கள் மிக அதிகமாக பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 39 இடங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 20 இடங்கள் மிதமாக பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 158 இடங்கள் குறைவான அளவு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களாகவும் என 239 இடங்கள் கண்டறியப்பட்டு, அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கனமழை, வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கக்கூடிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மண்டல அலுவலர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாக கூடிய பகுதிகளில் முன்னெற்பாடுகள், மீட்பு பணிகள், நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு செய்தல் போன்ற பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். 
      புயல் பாதுகாப்பு மையம், பல்நோக்கு மையம் மற்றும் தற்காலிக தங்குமிடங்களும், அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பொது விநியோகத்திற்கு தேவையான பொருட்களை இருப்பில் வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மண்டல அலுவலர்கள் அந்தந்த பகுதியில் பொதுமக்களிடம் கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அறிந்து, அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 
     முதல்நிலை பொறுப்பாளர்களில் நீச்சல் தெரிந்த நபர்கள், மரம் வெட்டும் நபர்கள் ஆகியோர்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்கள் பேரிடர் மீட்பு உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், முகாம்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்படும்பொழுது முதல்நிலை பொறுப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கனமழை மற்றும் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதனை சரிசெய்திடவும், மீட்புப் பணிகள் மேற்கொள்ளவும் JCB, பொக்கலைன் இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், ரப்பர் படகுகள், மின் சாதனங்கள் ஆகியவை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் நீர்வரத்து குறித்து அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். 
   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மின் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, காவல் துறை, நகராட்சி நிர்வாக துறை, ஊரக வளர்ச்சி துறை, மீன்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மீட்பு பணிகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு கூடுதல் செயலாளர் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை/ மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவித்தார்.

    முன்னதாக கனமழை காரணமாக கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குடிகாடு பகுதியில் கடலூர் - சிதம்பரம் நெடுஞ்சாலையோரம் உள்ள பிரதான வாய்க்கால் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரை அகற்றும் பணி மற்றும் போக்குவரத்திற்கு இடையூறின்றி மழைநீர் வடிய ஏதுவாக தூர்வாரும் பணி நடைபெறுவதையும், கே.என்.பேட்டை மற்றும் நவநீதம் நகர் பகுதியில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி மழைநீர் வெளியேற்றுவது குறித்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வெள்ள தடுப்பு நடவடிக்கைகளாக மணல் மூட்டை தயார் நிலையில் உள்ளதையும், தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

      இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணியகோட்டி, மாநகராட்சி ஆணையாளர் கிஷன்குமார்,  ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பாலகணேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம் உட்பட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.