இடைநிற்றல் மாணவர்களை பள்ளி கல்லூரிகளில் சேர்க்க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உதவ வேண்டும்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்!
இடைநிற்றல் மாணவர்களை பள்ளி கல்லூரிகளில் சேர்க்க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உதவ வேண்டும்:
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்!
வேலூர், அக்.18- படிக்காமல் இடை நிற்பவர்களை பார்த்து பள்ளி, கல்லூரிகளில் கொண்டு போய் சேர்க்க ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசினார்.
விஐடி பல்கலைக்கழகத்தில் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 925 மாணவ, மாணவிகளுக்கு ரூ.87.15 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது.
விழாவுக்கு தலைமை வகித்து, அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை தலைவரும், விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் பேசியது:
தமிழகத்தில் வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் தருமபுரி மாவட்டங்கள் தான் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியாகும். அது வளர வேண்டுமெனில் அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும்.
கல்வி நிரந்தர செல்வம். கல்வி அழியாத செல்வம் என முன்னோர்கள் கூறியுள்ளனர். குழந்தைகளுக்கு கல்வி அளித்தால் ஏழைகளே இருக்க மாட்டார்கள். உலகில் 193 நாடுகள் உள்ளன. இதில் 50 நாடுகளில் தான் இலவச கல்வி வழங்கப்படுகிறது. இந்தியாவில் அப்படியான சூழல் இல்லை. மற்ற எல்லாவற்றையும் இலவசமாக கொடுக்கிறோம். ஆனால் கல்வியை இலவசமாக கொடுங்கள் என்று கேட்பவரும் இல்லை, கொடுப்பவரும் இல்லை.
பள்ளிக்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அண்மையில் நாடாளுமன்ற குழு ஆய்வில் 1-ம் வகுப்பில் சேர்ந்து 12-ம் வகுப்பு வரை எவ்வளவு பேர் செல்கின்றனர் என்று கணக்கிடப்பட்டது. இதில் 73 சதவீதம் பேர் போகவில்லை என்பது தெரிந்தது. இதில் 27 சதவீதம் பேர் 12-ம் வகுப்பு வரை முடிக்கிறார்கள். தமிழ்நாடு, கேரளத்தில் மட்டும் பள்ளி படிப்பை முடிப்பவர்கள் அதிகம்.
தமிழக அரசியல் கட்சிகள் இதில் அதிகம் அக்கறை காட்டவில்லை. அரசு அக்கறை காட்டினாலும் முழுமையாகச் செய்ய முடியவில்லை.
விஐடி பல்கலைக்கழகத்தில் 43,000 மாணவர்கள் உள்ளனர். 4000 பேர் பிஎச்டி படிக்கின்றனர். அவர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.35,000 வழங்குகிறோம். மீதமுள்ள 39,000 பேரில் 700 பேருக்கு தான் கல்வி உதவித்தொகை கிடைக்கிறது. அரசு பள்ளி, அரசு கல்லூரிகளில் படித்தால் இலவச கல்வி வழங்கப்படுகிறது.
இன்றைய சூழலில் அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 94,000 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 210 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதற்கு காரணம் மாணவர் வருகை குறைந்து வருவது தான்.
தமிழகத்தில் 2 ஆயிரம் பள்ளிகள் மாணவ, மாணவர்கள் வருகை குறைவாக உள்ளது. மாணவர்கள் அனைவரும் தனியார் பள்ளிக்கு செல்கின்றனர். எல்லோரும் கல்வி கட்டணத்தை செலுத்த முடிவதில்லை. அரசு எந்த உதவியும் செய்ய முடிவதில்லை.
இதுவரை 11,658 ரூ.14.30 கோடி கல்வி உதவித்தொகை வழங்கி இருக்கிறோம். 925 பேருக்கு ரூ.87.15 லட்சம் வழங்கி உள்ளோம். ஆனால் அனைவருக்கும் உதவி செய்ய முடியவில்லை. போதிய பணத்தைத் திரட்ட வேண்டும். எல்லோரும் நினைத்தால் செய்யலாம்.
பணம் இருந்தால் போதாது. மனம் வேண்டும். அபிராமி ராமநாதன் போன்று பலருக்கும் உதவும் மனப்போக்கு வேண்டும்.
கல்வியில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். படிக்காமல் இடை நிற்பவர்களை பார்த்து பள்ளி, கல்லூரிக்கு கொண்டு போய் சேர்க்க ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் 20 சதவீதம் 30 சதவீதம் பேர் 12-ம் வகுப்பு முடிக்கின்றனர். கல்வி மட்டுமல்ல எதிர்காலம் உள்ளது. இதை மாற்றி வளர்ந்த நாடுகளை போல அனைவரையும் படிக்க வைக்க வேண்டும்.
ஸ்டார்ஸ் திட்டத்தில் நுழைவுத் தேர்வு எழுதாமல் வர முடியும். அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கி வருகிறோம். வேலைவாய்ப்பும் பெற்று தருகிறோம். இலவசங்களை கல்வி, வேலைவாய்ப்பைக் கொடுத்தால் வீடும், நாடும் உயரும்.
இந்தியாவில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 30 சதவீதம் உள்ளது. 3 கோடி பேர் வெளிநாட்டில் வேலை பார்க்கின்றனர். அவர்கள் திருப்பி அனுப்பும் பணம் 150 பில்லியன் டாலராக (14.04 லட்சம் கோடியாக) உள்ளது. இந்த தொகை வீட்டுக்கும், அரசுக்கும் பயன்படுகிறது.
நிறைய இளைஞர்கள் படித்தால் உலகம் முழுவதும் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடுகளில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அந்த வெளிநாடுகளில் உலகெங்கும் சென்று வேலை செய்யும் வாய்ப்பு உள்ளது..
விளையாட்டு போட்டிகளில் பின்தங்கி இருக்கிறோம். இந்த ஆண்டில் காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்துள்ளன.
காமன்வெல்த் போட்டிகளில் 39 பதக்கங்களை பெற்றோம். ஆஸ்திரேலியா 171 பதக்கங்களை பெற்றுள்ளது. 148 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா 39 பதக்கங்களை பெற்றோம். ஸ்காட்லாந்து மக்கள் தொகை 55 லட்சம் ஆகும். இந்தியாவுக்கு நிகராக பதக்கங்களை பெற்றது. இங்கிலாந்து 6 கோடி மக்கள் தொகை கொண்டது. ஆனால் 110 பதக்கங்களை பெற்றது. இதைப் பற்றி யாரும் பெரிதாக கவலைப்படவில்லை.
ஆசிய போட்டிகளில் சீனா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 85 பதக்கங்களை பெற்றுள்ளது. சீனா 341 பதக்கங்களை வென்றுள்ளது.
எப்படி சீனாவால் அதிக பதக்கங்களை வெல்கின்றனர். அமெரிக்காவை தோற்கடித்து வருகின்றனர். விளையாட்டு போட்டிகளில் அதிக பதக்கம் பெற மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏழை, நடுத்தர மக்களுக்கு உயர்கல்வி கிடைக்க அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலம் உதவித்தொகை வழங்கி வருகிறோம்.
இந்தியாவில் உள்ள 800 மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக வட ஆற்காடு மாவட்டம் திகழ வேண்டும் என்று பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினராக, சென்னை அபிராமி மெஹா மால் நிர்வாக இயக்குநர் அபிராமி ராமநாதன் பேசுகையில், நான் இதுவரை 25 கோடியை மக்கள் சேவைக்காக வழங்கி உள்ளேன். இன்றைய சூழலில் அவரவர் துறையில் இளைஞர்கள் புதுமையைப் புகுத்த வேண்டும். நான் இருக்கும் வரை அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளைக்கு ஆண்டுதோறும் எனது பிறந்தநாளில் ரூ.20 லட்சம் வழங்க தயாராக உள்ளேன் என்றார்.
விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் வாழ்த்துரை வழங்கி பேசினார்.
கௌரவ விருந்தினர்களாக ஆம்பூர் எம்.எல்.ஏ., அ.செ.வில்வநாதன், ஆற்காடு எம்.எல்.ஏ., எஸ்.எம்.சுகுமார், காட்பாடி எம்.எல்.ஏ., எம்.சுதாகர், வேலூர் எம்.எல்.ஏ., எம்.எம். வினோத் கண்ணன் மற்றும் கல்லூரி கல்வி இணை இயக்குநர் அ.மலர், அறக்கட்டளை அறங்காவலர் வே.பதுமனார், மயிலாம்பிகை குமரகுரு, செயலாளர் ஜே.லட்சுமணன், பொருளாளர் கே.ஜவரிலால் ஜெயின், துணை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜ் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.