நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் என்எல்சிஐஎல் இயக்குநர் சமீர் ஸ்வரூப் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்!
நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா: என்எல்சிஐஎல் இயக்குநர் சமீர் ஸ்வரூப் பங்கேற்று 693 பேருக்குப் பட்டங்களை வழங்கினார்!
நெய்வேலி, அக்.17 -
கடலூர் மாவட்டம்,
நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் ஜவஹர் கல்விக் கழகத்தின் புரவலரும், என்எல்சிஐஎல் (NLCIL) மனிதவளத் துறை இயக்குநருமான சமீர் ஸ்வரூப், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பட்டமளிப்பு விழாப் பேருரையாற்றினார். முன்னதாக, கல்விக் கழகத் தலைவரும், என்எல்சிஐஎல் சுரங்கத்துறை செயல் இயக்குநருமான ஐ.எஸ். ஜாஸ்பர் ரோஸ் வரவேற்புரையாற்றினார்.
விழாவில், பட்டம் பெற்ற மாணவ-மாணவியருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த சமீர் ஸ்வரூப், திறன் மேம்பாடு, வாழ்நாள் தொடர் கற்றல் மற்றும் நன்னெறிப் பண்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், மாறிவரும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விழாவில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனிதவளத்துறை செயல் இயக்குநரும் கல்லூரிச் செயலாளருமான பங்கஜ் குமார், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம்-III/எல்.டி.எம்.பி.எஸ், எஸ்.எம்.இ, கன்வேயர் மற்றும் போக்குவரத்துப் பிரிவு செயல் இயக்குநரும் ஜவஹர் பள்ளிகளின் செயலாளருமான எஸ். ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். தேவி பட்டமளிப்பு விழாவை முறைப்படி தொடங்கி வைத்து, கல்லூரியின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை உள்ளடக்கிய ஆண்டறிக்கையை வாசித்தார். தொடர்ந்து துறைத் தலைவர்கள் பட்டதாரிகளை மேடைக்கு அறிமுகப்படுத்த, 693 மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி அளவில் தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்குப் பதக்கங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கல்லூரியின் வளர்ச்சிப் பணிகளுக்குத் தொடர்ந்து முழு ஆதரவளித்து வரும் என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் ஜவஹர் கல்விக் கழகத்திற்கு விழாவில் நன்றி தெரிவிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். தேவி அவர்களின் நிறைவுரையுடன் பட்டமளிப்பு விழா இனிதே நிறைவடைந்தது.
இவ்விழாவில் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.