பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நடத்தப்பட்ட மாதிரி ஒத்திகை பயிற்சி...

பெரம்பலூர்  மாவட்டத்தில் 
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நடத்தப்பட்ட மாதிரி ஒத்திகை பயிற்சி 

பெரம்பலூர், அக். 24-
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாதிரி ஒத்திகை பயிற்சி மற்றும் செயல் விளக்கம் நிகழ்ச்சியை  மாவட்ட ஆட்சித்தலைவர் அப்துல் ராசிக்  தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். 
            பொதுமக்கள் பேரிடர் காலங்களில் வீடுகளில் உள்ள பொருட்களைக் கொண்டு எவ்வாறு மீட்பு உபகரணங்கள் தயார் செய்வது மற்றும் பாதுகாத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தங்களை இடி, மின்னல்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, வாகனங்களில் செல்லும் போது மின் கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் அதிலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.
          மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்க வேண்டும், கட்டிடத்தில் ஏற்படும் தீயை எவ்வாறு அணைக்க வேண்டும், இடிபாடுகள் மற்றும் நீரில் சிக்கிய நபர்கள், கால்நடைகளை கயிறு மூலம் மீட்டல், ஏணி மூலம் மீட்டல், மூச்சுக்கருவி அணிந்து உயிர்களை காப்பாற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகளும், தீ விபத்தில் இருந்து காப்பாற்றுதல், சாலை விபத்தில் இருந்து காப்பாற்றுதல், மரம் அகற்றுதல், நீரில் சிக்கியவர்களை ரப்பர் படகு மூலம் மீட்டல், குடியிருப்புகளுக்குள் பாம்பு வந்தால் அவற்றை அச்சுறுத்தாமல் மீட்டு காடுகளுக்குள் விடுதல், தீவாளிகள், மணல், தீயணைப்பான்கள் கொண்டு பாதுகாப்பாக தீயை அணைக்கும் முறைகள், பேரிடர் காலங்களில் மரத்துக்கடியில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், வாகனங்களில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டினார்கள்.
        இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்  அனுசுயா,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சொர்ண ராஜ், உதவி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் வீரபாகு, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.