விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
விழுப்புரம், அக். 10-
விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அன்று (09.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,
விழுப்புரம் மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் பொருட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சுகாதாரத்துறை, வனத்துறை, நெடுஞ்சாலை துறை, மீன்வளத்துறை போன்ற பல்வேறு துறைகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் வடகிழக்கு பருவமழை மீட்பு பணிகள் மேற்கொள்வதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனடி மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கான பயன்படுத்தப்படும் சிறப்பு தளவாடங்களான இரப்பர் போட், ஜெனரெட்டர், சூப்பர் ஜெட் பம்ப், ஏணி வகைகள், ஹைட்ராலிக் டோர் ஓப்பனர், மரம் அறுக்கும் கருவிகள், கயிறு வகைகள், பாம்பு பிடிக்கும் கருவி, ஸ்டெச்சர், புயல்கால விளக்குகள், பாதுகாப்பு உடைகள் போன்ற உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, மீட்பு உபகரணங்கள் வாயிலாக மீட்பு பணிக்கான செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டதை நேரில் பார்வையிடப்பட்டது.
மேலும் வடகிழக்கு பருவமழை பேரிடர்காலங்களில் தீயணைப்பு பணியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிவது மட்டுமல்லாமல், பேரிடர் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டு பொதுமக்களை பாதுகாப்பாக அருகாமையில் உள்ள பாதுகாப்பு மையத்தில் தங்க வைத்திட வேண்டும். இதுமட்டுமல்லாமல் பிற துறைகளுடன் இணைந்து துரித மீட்பு நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் குமார், உதவி மாவட்ட அலுவலர் ஜெயசங்கர், துணை ஆட்சியர் (பயிற்சி) ஹரிஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.