பெரம்பலூரில் 42 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் கலெக்டர் வழங்கினார்




பெரம்பலூர், அக். 15-
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய சுகாதார இயக்கம், பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் கீழ் இயங்கும் 33 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்  மற்றும் 9 அரசு மருத்துவமனைகள் என மொத்தம் காலியாக உள்ள 42 ஒப்பந்த செவிலியர் தற்காலிகப் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் தலைவர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அப்துல் ராசிக்  பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார்  முன்னிலையில்   வழங்கினார். 
            பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது,
பல காலமாக அரசு மருத்துவமனைகளில் காலியாக இருந்த செவிலியர் பணியிடங்களுக்கு அவசர அவசியத்தைக் கருதி, ஒளிவுமறைவற்ற தன்மையுடனும், நேர்மையான முறையிலும் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் செவிலியர் தேர்வில் எடுத்த மதிப்பெண்களின் தகுதியின் அடிப்படையிலும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்களை வழங்கியும் இந்தத் தேர்வு மிகவும் வெளிப்படையாக நடத்தப்பட்டுள்ளது.
           புதிதாகப் பணியில் சேர்ந்த செவிலியர்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
     இப்படிப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் இரண்டு நாட்களுக்கு (14.10.2026 மற்றும் 15.10.2026) சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நீங்கள் ஏற்கனவே கற்றுக்கொண்ட விஷயங்கள் தான் என்றாலும், அரசுத் துறையில் இணைந்த பிறகு உங்களுக்காக இந்தப் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படுகிறது.
           அரசு மருத்துவமனைகளில் மக்களோடு மக்களாக நீங்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும், அந்தப் பணியினுடைய தன்மை என்ன, மருத்துவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய அவசியம் என்ன என்பதைப் பற்றி இந்தப் பயிற்சியில் கற்றுத்தரப்படும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் எவ்வாறு கனிவோடு நடந்துகொண்டு, அவர்களுக்கு உரிய வகையில் நல்ல கனிவான சொற்களைப் பேசி, அவர்களுடைய மனதை ஆற்றுப்படுத்திச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி வழங்கப்படவுள்ளது. எனவே, இந்த நல்ல வாய்ப்பினை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 
தனியார் துறையைப் பொறுத்து செவிலியர் பணியினை ஒப்பிடும்போது,  மருத்துத்துறையில் உங்கள் அனைவருக்கும் பொறுப்பு இருக்கின்றது, எனவே அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் பல்வேறு தரப்பு மக்களைச் சந்திக்கின்ற ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
            இதைக் கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதி மக்களுக்கான இந்தச் சேவையை நீங்கள் வழங்க வேண்டும்  
என தெரிவித்தார்.