திருப்பூரில் பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால பொது சேவையை விளக்கும் ரங்கோலி நிகழ்ச்சி வானதி சீனிவாசன் பங்கேற்பு!
திருப்பூரில்
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால பொது சேவையை விளக்கும் ரங்கோலி நிகழ்ச்சி வானதி சீனிவாசன் பங்கேற்பு
திருப்பூர், அக். 10-
திருப்பூர் கோவில்வழி பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையும், அவரது 25 ஆண்டுகால பொது சேவையையும் எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு ரங்கோலி நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, பாஜகவின் ஆந்திர மாநில இணைப் பொறுப்பாளரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையையும், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் சார்பில் திருப்பூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தாராபுரம் இடைத்தேர்தல் ஆளும் அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சித்தார்.
தொகுதிக்குள் வராமல் வெற்றி பெற்ற கட்சியின் தலைவரும், முதல்வரும் தற்போது கிராமம் கிராமமாக சென்று வாக்கு கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் மின்வெட்டு காரணமாக தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலைமை திருப்திகரமாக இல்லை என்றும், ஒன்றிய அரசின் திட்டங்களை தமிழகத்திற்கு முழுமையாக கொண்டு வர மாநில அரசு போதிய முயற்சி எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக இருந்த நிலையில், தற்போது வரி வசூலில் பின்தங்கி வருவதாகவும், மாநிலத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வதாகவும் கூறிய வானதி சீனிவாசன், மக்கள் கைதட்டலை பெறும் அரசியலை விட மாநில வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இடைத்தேர்தல் முடிவுகள் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும், தங்களை மாற்றத்திற்கான சக்தி எனக் கூறிக் கொள்பவர்களின் செயல்பாடுகளுக்கு இந்த தேர்தல் ஒரு பதிலை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் நடிகர்கள் கட்சி தொடங்குவது ஒரு வழக்கமாக மாறிவிட்டதாகக் கூறிய அவர், அனைத்து நடிகர்களும் அரசியலில் வெற்றி பெறுவதில்லை என்றும், 2021-ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு நடிகரை எதிர்த்து தான் வெற்றி பெற்றதாகவும் குறிப்பிட்டார்.