என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில் "நேர்வழி நிறைச்செல்வம்" என்ற கருப்பொருளுடன் விழிப்புணர்வு வார விழா - 2026...
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில் "நேர்வழி நிறைச்செல்வம்" என்ற கருப்பொருளுடன் விழிப்புணர்வு வார விழா - 2026
நெய்வேலி, அக்.27-கடலூர் மாவட்டம், நெய்வேலி, என்எல்சி இந்தியா நிறுவனம் (NLCIL), மத்திய கண்காணிப்பு துறை ஆணையத்தின் (CVC) வழிகாட்டுதல்களுக்கு இணங்க, "நேர்வழி நிறைச்செல்வம்" ("Probity for Prosperity" - “सत्यनिष्ठा से समृद्धि”) என்ற முதன்மைப் பிரச்சாரக் கருப்பொருளின் கீழ், தனது கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா (VAW) - 2026, நேற்று (26.10.2026), நெய்வேலியில் கோலாகலமாகத் தொடங்கியது.
இந்தத் தொடக்க விழாவில், மூத்த உயரதிகாரிகள், பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பங்குதாரர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
“நேர் பாதை - இன்றும் என்றும்” (“The Straight Path-Today & Forever”) மற்றும் "பூஜ்ஜிய ரூபாய் நோட்டு" (“Zero Currency Note” - லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வுக் குறியீட்டு நோட்டு) ஆகிய கருத்துகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வு வாகனம் முக்கிய பிரமுகர்களால் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இனிதே தொடங்கின.
இந்த வாகனம், நேர்மைச் செய்திகளைப் பரப்புவதற்காக விழிப்புணர்வு தொடர்பான வண்ணமயமான சுவரொட்டிகளுடன் வலம் வந்தது. தொடர்ந்து, கண்காட்சிப் பகுதிக்குச் சென்ற பிரமுகர்கள், பள்ளி மாணவ-மாணவியரும், பொதுமக்களும் நேர்மை, நன்னெறி மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வை மையமாகக் கொண்டு படைப்பாற்றலுடன் உருவாக்கியிருந்த மலர் மற்றும் வண்ணக் கோலங்களைப் பார்வையிட்டனர்.
தொடர்ந்து, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (லிக்னைட்) அரங்கில் நடைபெற்ற முதன்மைத் தொடக்க விழா, தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நேர்மை உறுதிமொழியை அனைவரும் இணைந்து ஏற்றுக் கொண்டதன் மூலம் தொடங்கியது.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன், தனது உரையில், அமைப்புசார் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், வெளிப்படையான பொதுக் கொள்முதல் மற்றும் மின்னணு ஆளுகை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். புகார்கள் மற்றும் வழக்குகளை வெற்றிகரமாகத் தீர்த்து வைப்பதில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சிறந்த செயல்பாட்டை நிலக்கரி அமைச்சகம் (MoC) பாராட்டியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். டிஜிட்டல் உள்கட்டமைப்பு முன்னேற்றம் அடைந்து வரும் அதே வேளையில், நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை மேலும் நவீனமயமாக்கக் கூடுதல் முயற்சிகள் தேவைப்படுகின்றன என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, ஒப்பந்த மேலாண்மையில் நிலவும் செயல்பாட்டுச் சவால்கள் குறித்துப் பேசிய அவர், தற்போதைய தடைகளை நிவர்த்தி செய்து, ஒப்பந்தங்களை உரிய காலத்திற்குள் முடிப்பது தீவிரமாக உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இளம் பார்வையாளர்கள் மத்தியில் உரையாற்றிய தலைமை கண்காணிப்பு அதிகாரி, சமூக ஊடகத் தளங்கள் மற்றும் இணையம் முழுவதும் ‘போலிப் பதிவுகள்' (Deep fake) பெருமளவில் பரவி வருவதன் காரணமாக இன்று மாணவர்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள் குறித்து கவலை தெரிவித்தார். முந்தைய காலங்களில் அறிந்திராத மொபைல் போன்களைக் கவனக் குறைவாகப் பயன்படுத்தினால், அவை இளம் மனங்களை எவ்வாறு எதிர்மறையாகப் பாதிக்கவும், திசைதிருப்பவும் கூடும் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மாணவர்கள் விழிப்புடன் இருக்கவும், நெறிமுறையான டிஜிட்டல் பயன்பாட்டைக் (digital hygiene) கடைப்பிடிக்கவும், தார்மீக விழுமியங்களைப் போற்றவும் வலியுறுத்தினார். என்எல்சி இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் நாட்டின் வளத்தை நோக்கிய ஒரு கூட்டுப் பொறுப்பாக, விழிப்புடன் செயல்படுமாறு அனைத்து பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் குடிமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில், என்யுபிபிஎல் (NUPPL) மற்றும் என்டிபிஎல் (NTPL) ஆகிய பிற இடங்களில் செயல்படும் கூட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEOs) காணொளி வாயிலாகச் சிறப்புரை ஆற்றினர். அதனைத் தொடர்ந்து இயக்குநர் (மின்துறை) பி.எல்.எஸ்.எஸ். சைதன்ய பிரகாஷ் மற்றும் இயக்குநர் (திட்டங்கள் மற்றும் செயலாக்கம்) ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றினர்.
இந்த விழாவிற்குத் தலைமை தாங்கிய மனிதவளத் துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப் தமது உரையில், நேர்மை என்பது வெறும் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் நடைமுறை மட்டுமல்ல. மாறாக, நிலையான நிறுவன வளர்ச்சி மற்றும் மக்கள் நம்பிக்கையை வளர்த்தெடுப்பதற்கான இன்றியமையாத அடித்தளமாகும் என்பதை வலியுறுத்தி கூறினார்.
நிர்வாகத்தில், டிஜிட்டல் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்பாட்டுப் பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்காக, விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட புதிய தகவல் தொழில்நுட்ப முயற்சிகளை (IT initiatives) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரமுகர்கள் முறைப்படி தொடங்கி வைத்தது இந்தத் தொடக்க விழாவின் ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்விற்கு மேலும் மெருகூட்டும் வகையில், நேர்மை, நன்னெறி நடத்தை மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஆகிய கருத்துகளை மையமாகக் கொண்டு, பள்ளி மாணவர்களின் நேர்த்தியான, கவனத்தை ஈர்க்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இத்தொடக்க விழாவின் மகத்தான வெற்றி, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அனைத்து செயல்பாட்டுப் பிரிவுகள் மற்றும் மக்கள் தொடர்பு மையங்களில் முழுமையான வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் நேர்மையை நிலைநிறுத்துவதில் நிறுவனத்திற்கு உள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.