ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் 125 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவு - சிறப்பு விழா!
ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் 125 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவு - சிறப்பு விழா
வேலூர், அக்.10-வேலூர் மாவட்டம், வேலூர் அன்பிற்குரிய ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் தெய்வீக அருளாசியுடன், ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில், 125 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றதைக் கொண்டாடும் சிறப்பு விழா, நேற்று (09.10.2016) வெள்ளிக்கிழமை ஸ்ரீ நாராயணி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ நாராயணி குழும நிறுவனங்களின் இயக்குநர் மற்றும் அறங்காவலர் பேராசிரியர் என். பாலாஜி, தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக வேலூர் மாநகராட்சி ஆணையர் கி.கேத்தரின் சரண்யா, கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். மேலும், ஸ்ரீ நாராயணி குழும நிறுவனங்களில் இணை இயக்குநர் ஸ்ரீநாத் பாலாஜி மற்றும் ஸ்ரீகாந்த் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கீதா இனியன், நிர்வாக அலுவலர் டாக்டர் மாதவி சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் கார்த்திகேயன், டாக்டர் சிவானந்தம் மற்றும் டாக்டர் மனீஷ், சிறுநீரக மருத்துவ நிபுணர்கள் டாக்டர் எழில் நிலவன், டாக்டர் தேவா மற்றும் டாக்டர் வெங்கட்ராமணன், மயக்கவியல் நிபுணர் டாக்டர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சேவையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய மருத்துவர்கள், சிகிச்சை பெற்று நலமடைந்த பயனாளிகள் மற்றும் சிறுநீரக தானம் வழங்கிய கொடையாளர்கள் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். அவர்களின் அற்பணிப்பு, மனித நேயம் மற்றும் தன்னலமற்ற சேவையை போற்றும் வகையில் இந்த கௌரவிப்பு நிகழ்வு அமைந்தது.