விழுப்புரம்
வள்ளலார் தருமச்சாலை சார்பில் 11-ந் தேதி 1,000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்
விழுப்புரம், அக். 08-
விழுப்புரம் வள்ளலார் சத்திய தருமச்சாலை நிறுவனர் ஜெய.
அண்ணாமலை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலக ஒருமைப்பாட்டை வலியுறுத்திய திருஅருட்பிரகாச
வள்ளலாரின் 204-வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் வள்ளலார் சத்திய தருமச்சாலை அன்பர்கள் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே உள்ள கேசவன் தெரு வள்ளலார் இல்லத்தில் காலை முதல் தொடர்ந்து 3 வேளையும் அன்னதானம் நடைபெற உள்ளது.
பின்னர் அன்று மாலை 4 மணியளவில் ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 1,000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் பயன் பெற விரும்பும் 1,000 குடும்பங்களுக்கு வருகிற 10-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டோக்கன் வழங்கப்படும். டோக்கன் பெற்ற பயனாளிகளுக்கு மட்டுமே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
விழுப்புரம் வள்ளலார் சத்திய தருமச்சாலை சார்பில் ஆண்டுக்கு 3 முறை இதுபோன்ற மக்கள்
நலத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புபவர்கள் தருமச்சாலையை அணுகலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.