தமிழக விவசாயிகள் பயிர்க்கடனை அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்: பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் முனைவர் மு. ஞானமூர்த்தி கோரிக்கை!
தமிழக விவசாயிகள் பயிர்க்கடனை அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்:
பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் முனைவர் மு. ஞானமூர்த்தி கோரிக்கை!
சென்னை, செப்.19-
தேர்தலின் போது தமிழக வெற்றிக் கழக தலைவர் முதல்வர் ஜோசப் விஜய், தங்களுடைய தேர்தல் வாக்குறுதியாக சிறு குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும், பெரிய விவசாயிகளுக்கு 50% பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
தமிழக அரசு ஆரம்பத்தில் ரூபாய் 50,000 வரை கடன் வாங்கியுள்ள விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி எனவும், பின்பு ரூபாய் 75 ஆயிரம் ஆக உயர்த்தி அறிவித்தது. ஆனால் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், பல இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் விவசாய சங்கத்தினர் 5வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் நிலத்தில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், போராட்டத்தில் சமைப்பதற்காக அரிசி கொண்டு வந்ததை காவல்துறை அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் நேற்று முன்தினம் விவசாயிகள் பொது இடத்தில் போராட அனுமதி மறுக்கப்பட்டதோடு விவசாயிகள் திருச்சிக்கு வர முடியாமல் தடுக்கப்பட்டனர். மேலும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அதனையும் மீறி போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தனியார் நிலத்தில் போராடி வருகின்றனர்.
போலீசார் உணவுப் பொருட்களை தடுத்துள்ளனர். அதே நேரத்தில் விவசாயிகள் அமைதியாக போராடி வரும் நிலையில் அதனை தடுக்கும் விதத்தில் காவல்துறையினர் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அரசு விவசாயிகளை அடக்கும் முயற்சியில் ஈடுபடுவதை தவிர்த்து, அவசியமற்ற செலவுகளை நிறுத்தி விவசாயிகள் கடன் முழுதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று
பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர்
முனைவர் மு. ஞானமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.