சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகளில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் மு. ஞானமூர்த்தி வலியுறுத்தல்!
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகளில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் மு. ஞானமூர்த்தி வலியுறுத்தல்!
சென்னை, ஆக.07-சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகளில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் மு. ஞானமூர்த்தி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மேலும் கூறுகையில்,
தமிழகத்தின் உயர்கல்வி மற்றும் தமிழாய்வுத் துறைக்கு அடித்தளமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைகளில் நிலவும் பேராசிரியர் பற்றாக்குறை மிகுந்த கவலையளிக்கிறது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைகளில் பேராசிரியர்கள் இரா.பி. சேது, வையாபுரி, மு.வ., ந. சஞ்சீவி, சி.பா., மு. சண்முகம், பொற்கோ, மணவாளன், இ. சுந்தரமூர்த்தி, வ. ஜெயதேவன், மா. செல்வராசன், வீ. அரசு, ய. மணிகண்டன், பழனி, ஏகாம்பரம் உள்ளிட்ட பல அறிஞர்கள் சிறப்பாகப் பணியாற்றி தமிழுக்கும் தமிழாய்வுக்கும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இவர்களில் பேராசிரியர் சி.பா., பேராசிரியர் பொற்கோ, பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி ஆகியோர் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.
குறிப்பாக, பேராசிரியர் பொற்கோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பெருமைமிக்க பாரம்பரியம் கொண்ட தமிழ்த் துறைகளின் தற்போதைய நிலை மிகவும் வருத்தமளிக்கிறது. பேராசிரியர் ந. சஞ்சீவி, பேராசிரியர் பொற்கோ ஆகியோர் பணியாற்றிய தமிழ் இலக்கியத் துறையில் இன்று நிரந்தர தமிழ்ப் பேராசிரியர்கள் இல்லை. தமிழ்மொழித் துறையில் இரண்டு விரிவுரையாளர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். அவர்களில் ஒருவரே தமிழ்மொழித் துறைத்தலைவராகவும், மற்றொருவர் தமிழ் இலக்கியத் துறையின் பொறுப்புத் தலைவராகவும் செயல்பட்டு வருகின்றார். அதாவது, இரண்டு துறைகளையும் இரண்டு விரிவுரையாளர்களே நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், திருக்குறள் ஆய்வு இருக்கை மற்றும் கிறித்தவத் தமிழ் ஆய்வு இருக்கை ஆகிய இரண்டிற்கும் பேராசிரியர் பணியிடங்கள் இருந்தபோதிலும், தற்போது அவை காலியாகவே உள்ளன.
இந்நிலையில், முதுகலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு, எம்.ஃபில்., முனைவர் பட்ட ஆய்வு உள்ளிட்ட படிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரிகளில் ஒரு துறை தொடர்வதற்கே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் அவசியம் என்று விதிமுறைகளை வகுக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே இத்தகைய அவலநிலை நிலவுவது வேதனையளிக்கிறது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் மொத்தம் சுமார் 70 துறைகள் உள்ளன. ஒரு காலத்தில் சுமார் 700 பேராசிரியர்கள் பணியாற்றிய நிலையில், தற்போது சுமார் 150 பேராசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சுமார் 500 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோன்ற நிலை தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறைகளிலும் நீடித்து வருகிறது.
எனவே, தமிழ்நாடு அரசு இந்த அவலநிலையை உடனடியாகக் கருத்தில் கொண்டு, சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை விரைவாக நிரப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் தலைவர் முனைவர் மு. ஞானமூர்த்தி, வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.