ஜெத்தா தமிழ்ச்சங்கத்தின் மனிதநேய முயற்சியால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய தமிழர் குடும்பம்!

ஜெத்தா  தமிழ்ச்சங்கத்தின் மனிதநேய  முயற்சியால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய தமிழர் குடும்பம்! 

   சௌதி அரேபியா, ஆக.07-சவுதி அரேபியாவின் அபஹா நகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்த கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த மோகனமணி, என்பவர் வேலை இழப்பு, கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் விபத்தால் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், தாயகம் திரும்ப உதவுமாறு ஜெத்தா தமிழ்ச்சங்க  பொறியாளர் காஜா மைதீன் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
         இதனைத் தொடர்ந்து, பொறியாளர் காஜா மைதீன், ஜெத்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் கவனத்திற்கு இவ்விவகாரத்தை எடுத்துச் சென்று, தேவையான சட்டரீதியான நடைமுறைகள் உள்ளிட்ட அனைத்து செயல்முறைகளையும் தொடர்ந்து ஒருங்கிணைத்து மேற்கொண்டார். இடைவிடாத முயற்சியின் பலனாக,  மோகனமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இறுதி வெளியேறும் விசா (Final Exit Visa) பெறப்பட்டது.
       பயணத்திற்கு தேவையான விமானப் பயணச் சீட்டு பெறுவதற்கான பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ஜெத்தா தமிழ்ச்சங்க உறுப்பினர்களும், சமூக அக்கறை கொண்டோரும் இணைந்து உதவிக்கரம் நீட்டியதன் மூலம், குடும்பத்தினருக்கான விமானப் பயணச் சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
         அதன்படி, 2026 ஆகஸ்ட் 1 ஆம் தேதி, ஜெத்தாவிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி அவர்கள் விமானம் மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டனர்.     
          ஜெத்தா தமிழ்ச்சங்க  பொறியாளர் காஜா மைதீன் மற்றும்  சிவா ஆகியோர் விமான நிலையத்திற்குச் சென்று குடும்பத்தினரை வழியனுப்பி வைத்தனர். மேலும்,  இஸ்மாயில் ஷெரீப் அவர்களும் விமான நிலையத்தில் கலந்துகொண்டு தனது முழு ஒத்துழைப்பை வழங்கினார்.
        இந்தக் குடும்பத்தின் தாயகப் பயணம் மனிதநேயம், ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் உரிய நேரத்தில் வழங்கப்படும் உதவியின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்துள்ளது.
          பொறியாளர் காஜா மைதீன் மற்றும் ஜெத்தா தமிழ்ச்சங்கத்தின் இடைவிடாத சேவை மனப்பான்மையையும்,  தொடர்ச்சியான முயற்சியையும் சவுதி அரேபியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினரும், தாயகம் திரும்பிய குடும்பத்தினரும் மனமாரப் பாராட்டி, இம்முயற்சி மனிதநேயப் பணிக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும் எனக் குறிப்பிட்டு தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.