திருவண்ணாமலை மாவட்டத்தில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
திருவண்ணாமலை, ஜூலை. 29-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியா விடுதலை பெற்ற நாளை நினைவு கூறும் வகையில் சுதந்திர தின விழா ஒவ்வொறு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற 15.08.2026 (சனிக்கிழமை) அன்று 80 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மூவர்ண கொடியை ஏற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.
மேலும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் பார்வையிடுவார். மேலும் இவ்விழாவில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, சிறப்பாக செயல்பட்ட அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குவது, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளை கௌரவிப்பது, விழாவிற்கு தேவையான பந்தல்கள் அமைப்பது, உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, காவல்துறை சார்பாக அணிவகுப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பது, விழாவிற்கு வருகை தருகின்ற மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
மேலும் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற அனைத்து துறைகளும் ஒருகிணைந்து செயலாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் காஞ்சனா, வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வம் (திருவண்ணாமலை), சிவா (ஆரணி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இராமகிருஷ்ணன், உதவி ஆணையர் (கலால்) வளர்மதி, அருள்மிகு அருணாசலேஸ்சுவரர் திருக்கோயில் இணை ஆணையர் பரணிதரன், துணை பதிவாளர் (கூட்டுறவு சங்கம்) வினோத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.