தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடக் கோரி உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்!
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடக் கோரி உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்!
சென்னை, ஜுலை 09-தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்கள் (Specialists) மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்கள் (Super-Specialists) பற்றாக்குறை நிலவி வருகிறது.
குறிப்பாக விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை.
மேலும், மகப்பேறு மருத்துவம், பொது மருத்துவம், நுரையீரல் மருத்துவம், கணையியல், சிறுநீரக மருத்துவம், இதய மருத்துவம், எலும்பியல், குடலியல் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவப் பிரிவுகளில் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பல பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழ்நாட்டிலுள்ள பல அரசு மருத்துவக் கல்லூரிகளில் தேவையான எண்ணிக்கையில் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் இல்லாதது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission - NMC) ஏற்கனவே விளக்கம் கோரி நோட்டீஸ் வழங்கியுள்ளது.
மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறையால், பிற அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் சுழற்சி (Rotation) முறையில் தற்காலிகமாக பணியமர்த்தப்படுகின்றனர். இதனால் மருத்துவர்களின் பணிச்சுமை அதிகரிப்பதோடு, நோயாளிகளுக்கு தொடர்ச்சியான மற்றும் தரமான மருத்துவச் சேவை வழங்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது.
அரசு மிகுந்த நிதி செலவில் மருத்துவக் கல்லூரிகளை நிறுவியிருந்தாலும், போதுமான மருத்துவ நிபுணர்கள் இல்லாத காரணத்தால் அவை மக்களுக்கு முழுமையான பயனை அளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
எனவே, தமிழக முதலமைச்சர் அவர்கள் இவ்விஷயத்தில் தனிப்பட்ட கவனம் செலுத்தி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் முனைவர் மு. ஞானமூர்த்தி தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.