அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு என்எல்சி இந்தியா நிறுவனம் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதன் அடையாளமே புத்தகக் கண்காட்சி - தலைவர் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி பெருமிதம்!

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு என்எல்சி இந்தியா நிறுவனம் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதன் அடையாளமே புத்தகக் கண்காட்சி - தலைவர்  பிரசன்னகுமார் மோட்டுபள்ளி பெருமிதம்! 
நெய்வேலி, ஜூன் 28-கடலூர் மாவட்டம்,  
நெய்வேலி மக்களின் அறிவுத் திருவிழாவான "25-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி -   2026" நேற்று  (28.06.2026) மாபெரும் வெற்றியோடு சிறப்பாக நிறைவடைந்தது.    
    தனது வெள்ளி விழா ஆண்டினைக்  கொண்டாடிய இப்புத்தகத் திருவிழா, கடந்த 10 நாட்களில் நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள 510 கல்வி நிறுவனங்களில் இருந்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கலந்துகொண்டு பயன்பெறும் வகையில் அமைந்தது. மேலும், வாசகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஈர்த்து, சுமார் 2 லட்சம் மக்கள் பங்கேற்புடன்  மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
     டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கில் 
இந்த நிறைவு விழா, "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கில்" ஒரு மகுட நிகழ்வாகக் கம்பீரமாக அரங்கேறியது. என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி அவர்களின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், இதுநாள்வரை "லிக்னைட் அரங்கம்" என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற அரங்கம், 27.06.2026 அன்று முதல் "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கம்" என அதிகாரப்பூர்வமாக உருமாறியுள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான மாமனிதர் டாக்டர் கலாமிற்குச் செலுத்தும் உயர்ந்த மரியாதையாக, என்எல்சிஐஎல் நிர்வாகம் இந்த முன்னோடி முடிவை எடுத்துள்ளது. டாக்டர் கலாமின் அழியாத நினைவுகளைப் போற்றுவதோடு மட்டுமல்லாமல், அறிவுத் தேடல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தேசக் கட்டமைப்பு ஆகிய அவரது உன்னதக் கொள்கைகளால் எதிர்காலச் சந்ததியினரை ஊக்குவிக்க வேண்டும் என்ற என்எல்சிஐஎல் நிறுவனத்தின் ஆழமான அர்ப்பணிப்பையே இப்பெயர் மாற்றம் பறைசாற்றுகிறது.
     விழாவைச் சிறப்பித்த உயர் அதிகாரிகள் 
இந்த நிறைவு நாள் விழாவில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்  பிரசன்ன குமார் மோட்டுபள்ளி  முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். என்எல்சிஐஎல் நிறுவனத்தின் இயக்குநர்களான  சமீர் ஸ்வரூப் (மனிதவளத்துறை),  ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா (திட்டமிடல் & செயலாக்கம் மற்றும் மின்சாரத் துறை கூடுதல் பொறுப்பு) மற்றும் என்எல்சிஐஎல் தலைமை கண்காணிப்பு அதிகாரி  அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் (ஐ.பி.ஓ.எஸ்) ஆகியோர் விழாவில் பங்கேற்றுத் தங்களது வாழ்த்துரைகளை வழங்கினர்.     
    இவர்களுடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள், உயர் அதிகாரிகள், பணியாளர்கள், தொழிற்சங்க மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள், பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடியின ஊழியர் நலக் கூட்டமைப்பினர், பொதுத்துறையில் உள்ள பெண்கள் (WIPS) அமைப்பினர், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
விழாக் குழுவினருக்குத் தலைவர் பாராட்டு 
நிறைவு விழாவில் உரையாற்றிய தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்  பிரசன்ன குமார் மோட்டுபள்ளி அவர்கள், இப்புத்தகக் கண்காட்சியை இவ்வளவு பிரம்மாண்டமான வெற்றியாக மாற்றியமைத்த புத்தகக் கண்காட்சிக் குழுவின் தலைவர் மற்றும் அவரது குழுவினரின் அசாத்திய உழைப்பைப் பாராட்டி வாழ்த்தினார். பார்வையாளர்களின் வருகை, மாணவர்களின் பங்கேற்பு மற்றும் அரங்கில் செய்யப்பட்டிருந்த உலகத்தரம் வாய்ந்த வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில், கடந்த 25 ஆண்டுகால நெய்வேலி புத்தகக் கண்காட்சி வரலாற்றிலேயே இந்த வெள்ளி விழா ஆண்டுதான் மிகச் சிறந்தது என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
என்எல்சிஐஎல் நிறுவனம் எப்போதும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு (Inclusive Growth) முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், அதன் பிரதிபலிப்பே இப்புத்தகக் கண்காட்சி என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், கண்காட்சியின் முதல் நாளன்றே தனது சொந்தப் புத்தகமும் வெளியிடப்பட்டதால், இப்புத்தகக் கண்காட்சி தனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக அமைந்துவிட்டது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.     
     உலகின் மாபெரும் தலைவர்கள் பலரும் தங்களின் வெற்றிக்குக் புத்தகங்களே காரணம் என்று கூறியுள்ளதை நினைவு கூர்ந்த அவர், மாணவச் செல்வங்கள் இத்தகைய புத்தகக் கண்காட்சிகளை முழுமையாகப் பயன்படுத்தி, வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துத் தங்களின் அறிவை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
25-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2026, பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் இலக்கியக் கொண்டாட்டத்தில் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இக்கண்காட்சியின் ஒரு பகுதியாக, கண்காணிப்புத் துறையின் (Vigilance Department) சார்பில் சமூக மற்றும் பொது நற்பண்புகள் குறித்த முக்கிய விழிப்புணர்வு செய்திகள் ஒளிபரப்பப்பட்ட எல்இடி (LED) திரை பொருத்தப்பட்ட அலங்கார ஊர்தி (Float) அமைக்கப்பட்டு பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. கடந்த 10 நாட்களில் சுமார் 2 லட்சம் புத்தக ஆர்வலர்களும் பொதுமக்களும் இக்கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர். பள்ளி மாணவர்களின் அறிவுத் தேடலை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குக் கண்காட்சி நுழைவு முற்றிலும் இலவசமாக்கப்பட்டிருந்ததன் மூலம், 510 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 65,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பெருமளவில் பயனடைந்தனர்.
மேலும், கண்காட்சி நடைபெற்ற நாட்களில் தினந்தோறும் நடத்தப்பட்ட 'உடனடிப் போட்டிகள்' (On-the-Spot competitions) நிகழ்வுகளில் சுமார் 2,000 மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.     
     இத்திருவிழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் வியக்கத்தக்க வகையில் 95 படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இலக்கிய உலகிற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கிய 10 சிறந்த எழுத்தாளர்களும், 10 முன்னணிப் பதிப்பாளர்களும் விழாவில் முறைப்படி கௌரவிக்கப்பட்டதோடு, புகழ்பெற்ற மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் 17 புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
இவற்றுடன், வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடும் வகையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) வாசகர்களைக் கௌரவிக்கப் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ₹5,000 மற்றும் ₹10,000-க்கும் அதிகமாகப் புத்தகம் வாங்கிய அனைத்து பார்வையாளர்களுக்கும் தினசரி பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன் பார்வையாளர்களுக்காக நடத்தப்பட்ட அதிர்ஷ்டக் குலுக்கல் (Lucky Draw) மூலம் வெற்றியாளர்களுக்குப் புத்தகங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டு இக்கண்காட்சி சிறப்பிக்கப்பட்டது.
இலக்கியம் மற்றும்y கலாச்சாரத்தின் உன்னதக் கொண்டாட்டம் 
அரங்குகளில் அணிவகுத்தy எண்ணற்ற புத்தகங்கள் மட்டுமன்றி, இந்த வெள்ளி விழா புத்தகக் கண்காட்சியானது, இங்கு வருகை தந்த குடும்பங்கள் அனைவருக்கும் ஒரு முழுமையான மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் அறிவுசார் அனுபவத்தை வழங்கியது.     
     ஒவ்வொரு நாளும் நடைபெற்ற இலக்கிய அமர்வுகள், பட்டிமன்றம், எழுத்தாளர்களுடனான கலந்துரையாடல்கள், போட்டிகள் மற்றும் மெய்மறக்கச் செய்யும் கலை-கலாச்சார நிகழ்ச்சிகள் என ஒவ்வொன்றும் அனைத்துத் தரப்பு மக்களையும் உற்சாகத்தில் திளைக்கச் செய்தன. குழந்தைகளைக் கவரும் வகையில் உலா வந்த கார்ட்டூன் கதாபாத்திரங்களின் விழிப்புணர்வு அடையாளச் சின்னங்கள் (Mascots), குடும்பத்தினருக்குக் கூடுதல் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தன.
சிறப்பாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டிருந்த பொழுதுபோக்கு அரங்குகள் மற்றும் சுவையான உணவு அரங்குகள் ஆகியவை புத்தகத் திருவிழாவின் கொண்டாட்டத்தை மேலும் அதிகப்படுத்தின. இது கற்றல், பொழுதுபோக்கு மற்றும் குடும்பங்களின் சங்கமத்திற்கான ஒரு சிறந்த இடமாக அமைந்தது. விழா நடைபெற்ற அனைத்து நாட்களிலும் பார்வையாளர்களின் பாதுகாப்பு, வசதி மற்றும் தடையற்ற நிகழ்வு மேலாண்மை ஆகியவற்றிற்கு அமைப்பாளர்கள் மிக உயர்ந்த முன்னுரிமை அளித்து, அனைவருக்கும் ஒரு இனிமையான அனுபவத்தை உறுதிசெய்தனர்.
    நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் இந்த வெள்ளி விழா ஆண்டு, மாணவர்கள், குழந்தைகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்து, மாபெரும் வெற்றியோடு நிறைவடைந்துள்ளது. வாசிப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் அதே வேளையில், அறிவுசார் வளர்ச்சி மற்றும் வாழ்நாள் முழுவதுமான கற்றல் கலாச்சாரத்தை வளர்ப்பதன் மூலம், இப்பகுதியின் மிகச்சிறந்த மற்றும் புகழ்பெற்ற இலக்கிய மற்றும் கலாச்சாரத் திருவிழாக்களில் ஒன்றாக இது மீண்டும் தன்னை நிலைநிறுத்தி உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 25-ஆம் ஆண்டின் நினைவாக, உயர் அதிகாரிகளால் ஒரு சிறப்பு 'மின்-நினைவு மலர்' (E-Souvenir) வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெய்வேலி பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நேற்றைய 9-ஆம் நாள் கண்காட்சி நிகழ்வுகள் 
முன்னதாக, நேற்று (27.06.2026) நடைபெற்ற 9-ஆம் நாள் கண்காட்சி நிகழ்வில், என்எல்சிஐஎல் நிதித்துறை இயக்குநர் டாக்டர் பிரசன்ன குமார் ஆச்சார்யா தலைமையில் இலக்கிய விழா நடைபெற்றது. இவ்விழாவில், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் எஸ். மோகன் முதன்மை விருந்தினராகவும், திருச்சி என்ஐடி (NIT) பேராசிரியர் டாக்டர் ஆர். ஜஸ்டின் ஜோசிபஸ் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இத்திருவிழாவின் மரபுப்படி, சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, நெய்வேலி படைப்பாளிகளால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்புகள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளும் விழாவில் வெளியிடப்பட்டன.
    புத்தகக் கண்காட்சி மேலும் ஒரு நாள் நீட்டிப்பு! 
நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்குத் தொடக்கம் முதலே பொதுமக்கள் அளித்து வரும் அமோக ஆதரவையும், எல்லையற்ற இலக்கிய ஆர்வத்தையும் கருத்தில் கொண்டும், புத்தக ஆர்வலர்கள் தங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களை நிதானமாகத் தேர்ந்தெடுத்து வாங்குவதற்குக் கூடுதல் வாய்ப்பை வழங்கும் வகையிலும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 25-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2026, நாளை  திங்கட்கிழமை (ஜூன் 29, 2026) அன்று கூடுதலாக ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு, வாசகர்களுக்காகத் தொடர்ந்து திறந்திருக்கும். புத்தகப் பிரியர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌‌.