சுதந்திரப் போராட்ட வீராங்கனை தியாகி மு.அஞ்சலை அம்மாள் 136ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் ப.ராஜ்குமார் மலர்மாலை அணிவித்து மரியாதை!
சுதந்திரப் போராட்ட வீராங்கனை தியாகி மு.அஞ்சலை அம்மாள் 136ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் ப.ராஜ்குமார் மலர்மாலை அணிவித்து மரியாதை
கடலூர், ஜுன் 01-
சுதந்திரப் போராட்ட தியாகி மு.அஞ்சலை அம்மாள் அவர்களின் 136ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம், கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் அமைந்துள்ள அவர்களின் திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ப.ராஜ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் பா.தாமரைசெல்வம் ஆகியோர் முன்னிலையில் நேற்று (01.06.2026) மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் அவர்கள் கடலூர் முதுநகரில் அம்மாக்கண்ணு – முத்துமணி தம்பதியருக்கு மகளாக 1890 ஆம் ஆண்டு பிறந்தார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். இவர் சிறுவயது முதல் சுதந்திரப் பற்று மிக்கவராகத் திகழ்ந்தார். 1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு தமது பொது வாழ்க்கையைத் தொடங்கினார்.
அஞ்சலை அம்மாள் அவர்கள், நீல் சிலை அகற்றும் போராட்டம், சட்டமறுப்பு மறியல் போராட்டம், தனிநபர் சத்தியாகிரக போராட்டம், அந்நியத்துணி புறக்கணிப்பு போராட்டம், நெசவாளர்கள் போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
கருவுற்ற நிலையில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களை, ஆங்கிலேய அரசு பரோல் எனப்படும் சிறை விடுப்பில் மகப்பேறுக்காக வெளியில் அனுப்பி குழந்தை பெற்றப் பின்னர், அவரை மீண்டும் சிறையில் அடைத்தது.
நீல் சிலையை அகற்றும் போராட்டத்தில் தனது மகள் லீலாவதியை ஈடுபடுத்தியதால், அஞ்சலை அம்மாள் அவர்களின் மகளுக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தந்தை பெரியார் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தபோது கடலூர் வீதிகளில் கதர்த்துணி அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பரப்புரை செய்த நிகழ்வில், அஞ்சலை அம்மாள் அவர்களும் பங்கேற்று கதர்த்துணி மூட்டைகளை தலையில் சுமந்து சென்று விற்பனை செய்தார்.
சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் அவர்கள் விடுதலைப் போராட்டத்திற்காக தனது குடும்பச் சொத்துக்களையும், குடியிருந்த வீட்டையும் விற்று, நாட்டிற்காக தியாகம் செய்தார்.
தேச விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டார். இவரது குடும்பம் பல நாட்கள் வறுமையில் வாழ்ந்தாலும், எந்தச் சூழ்நிலையிலும் தேச நலனையே பெரும் மூச்சாகக் கொண்டு விடுதலைக்காக போராடியது.
மகாத்மா காந்தியடிகள் கடலூருக்கு வந்தபோது அவரைச் சந்திப்பதற்கு அஞ்சலை அம்மாளுக்கு ஆங்கிலேய அரசு தடை விதித்தது. ஆனால் அஞ்சலை அம்மாள் அவர்கள் அத்தடையை மீறி பர்தா அணிந்து காந்தியடிகளை அழைத்துச் சென்றார். அதனால் அஞ்சலை அம்மாள் "தென்னாட்டின் ஜான்சி ராணி” என மகாத்மா காந்தியடிகளால் அழைக்கப்பட்டார்.
சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் அவர்கள் 1937, 1946 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்பேற்பட்ட சிறப்புமிக்க சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவை போற்றுகின்ற வகையிலும், அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் அரசின் சார்பில் கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் முழு திருவுருவச் சிலை 2023ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் தியாகத்தை வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அவரது பிறந்த நாளான ஜூன் 1ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாட அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் குடும்ப வாரிசுதாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.