கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் கூட்டுத் தணிக்கை செய்யும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்டத்தில்
தனியார் பள்ளி வாகனங்கள் கூட்டுத் தணிக்கை செய்யும் பணியை
மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
கடலூர், மே 16-
கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை போக்குவரத்துத் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மூலம் கூட்டுத் தணிக்கை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று (15.05.2026) தொடங்கி வைத்து, பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தாவது,
அனைத்து பள்ளி வாகனங்களும் வருடத்திற்கு ஒருமுறை அனுமதிச் சீட்டில் வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றி செயல்படுவதை உறுதி செய்திட வருவாய் கோட்டாட்சியர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், உறுப்பினர் மற்றும் செயலாளர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான பல்துறை குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது.
இக்குழுவினரால் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதிபெற்று இயங்கும் கடலூரில் 56 பள்ளிகளை சார்ந்த 279 வாகனங்களும், பண்ருட்டியில் 29 பள்ளிகளை சார்ந்த 136 வாகனங்களும், நெய்வேலியில் 12 பள்ளிகளை சார்ந்த 39 வாகனங்களும், என மொத்தம் 97 பள்ளிகளை சார்ந்த 454 வாகனங்கள் கூட்டுத் தணிக்கை செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதிபெற்று இயங்கும் சிதம்பரத்தில் 76 பள்ளிகளை சார்ந்த 420 வாகனங்களும், விருத்தாசலத்தில் 39 பள்ளிகளை சார்ந்த 482 வாகனங்களும், என மொத்தம் 115 பள்ளிகளை சார்ந்த 902 வாகனங்களும் என கடலூர் மாவட்டத்தில் 212 பள்ளிகளை சார்ந்த 1356 ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
இவ்வாகனங்களில் அவசரவழி கால கதவு, முதலுதவி பெட்டகம், தீயணையப்பான் கருவி, முன், பின் சென்சார் கேமரா, மற்றும் படிக்கட்டுகள் உள்ளிட்ட 18 அம்சங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. இக்கூட்டுத் தணிக்கை குழுவில் உள்ள துறை அலுவலர்கள் முறையாக பள்ளி வாகனங்களை பரிசோதனை மேற்கொள்ளவும், இதில் குறைபாடு உள்ள வாகனங்கள் கண்டறியும் பட்சத்தில் தகுதி சான்று ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
ஆய்வின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (கடலூர் மற்றும் சிதம்பரம்) செல்வம், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக்) மோகன், உதவி மாவட்ட அலுவலர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை விஜயகுமார், கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழினியன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.