அரசு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேச்சு!

அரசு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள்  சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: 
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேச்சு!
          வேலூர், ஏப்.05-அரசு  பல்கலைக்கழகங்களில்  மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் கருத்து தெரிவித்தார்.
     விஐடி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தினம், விளையாட்டு விழா  நடைபெற்றது. பதிவாளர் ஜெயபாரதி வரவேற்றார். துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் ஆண்டறிக்கை வாசித்தார்.
    விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது:
விஐடி பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று 'ஸ்டார்ஸ்' திட்டத்தின் கீழ் இணைந்த மாணவர்கள், மற்ற மாணவர்களுக்கு இணையாகப் போட்டியிட்டுத் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது.
இந்த ஆண்டில் இதுவரை வேலைவாய்ப்புகளில் 10,000 பணி ஆணைகளை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 1000 நிறுவனங்கள் பங்கேற்று 14,000 மாணவர்கள் பணி ஆணை பெற்றுள்ளனர்.
மாணவர்களின் வருகைப் பதிவு என்பது வெறும் வகுப்பறையில் அமர்வது மட்டுமல்ல, அது ஒரு மாணவனின் ஒழுக்கத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும்.
       ஒரு கல்வி நிறுவனத்தின் வெற்றியில் 90 சதவீத பங்கு ஆசிரியர்களையே சாரும். மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே நிர்வாகம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளாகும். 
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த 'ப்ராக்டர் சிஸ்டம்'  இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேணடும். கல்விக்கு மத்திய, மாநில அரசுகள் அதிகம் செலவிட வேண்டும்.
ஓ.இ.சி.டி. நாடுகள் கல்விக்கு தனி நபருக்கு 20,500 டாலர்களை செலவிடுகிறது. மேற்கத்திய நாடுகள் 15,000 முதல் 25,000 டாலர்களை செலவிடுகிறது. சீனா 17,700 டாலர்களையும், இந்தியா 266 டாலர்களை மட்டுமே செலவிடுகிறது.
     சீனா கடந்த ஆண்டில் கல்விக்கு 800 பில்லியன் டாலர்களையும், இந்தியா 12 பில்லியன் டாலர் அளவுக்கு நிதி ஒதுக்கியுள்ளது.
மக்கள் தொகையில் சீனாவை விஞ்சி உள்ளோம். கல்வியில் முன்னேறாமல் இந்தியா உலக தலைவராக மாற  முடியாது.
உலகெங்கும் வாழும் இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு ரூ.12 லட்சம் கோடி வரை அனுப்பி உள்ளனர். இதில் மகாராஷ்டிரம், கேரளம், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்கள் முதல் இடத்தில் உள்ளன. மீதமுள்ள 25 மாநிலங்கள் 50 சதவீத தொகையை பகிர்ந்து கொள்கின்றன.
கல்விக்காக அதிக நிதி ஒதுக்குவது மாநில மற்றும் மத்திய அரசுகளின் கடமையாகும். சில பல்கலைக்கழகங்கள் நிதிச் சுமையைக் கருதி மாணவர் சேர்க்கையைக் குறைக்கின்றன. 
தமிழ்நாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில், இரண்டில் மட்டுமே 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.     
     அரசு பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். 
அப்போதுதான் நடுத்தர மற்றும் ஏழை எளிய மாணவர்கள் எளிதாகக் கல்வி கற்க முடியும். 
தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கும் அரசு ஏதேனும் ஒரு நிதி உதவித் திட்டத்தை வகுக்க வேண்டும்.
சீனா போன்ற வளர்ந்த நாடுகளைப் போல இந்தியா வளர வேண்டுமெனில் கல்விக்கான பட்ஜெட்டை உயர்த்தினால் மட்டுமே இது சாத்தியமாகும்.
       இன்றைய விழாவில் சுமார் 3,800 மாணவர்கள் பதக்கங்களும், விருதுகளும் பெறுகின்றனர். மேலும், ரூ.2.23 கோடி மதிப்பிலான நிதி உதவிகள்  வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
    வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இயக்குநர் பிஜு ஜார்ஜ் சிறப்பு விருந்தினராகக்  கலந்து கொண்டு பேசும்போது, “மாணவர்கள் தொடர்ந்து கற்க வேண்டும். இது பொறியியல் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். கல்வி என்பது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய ஒரு பயிற்சியாகும். மாணவர்களுக்கு ஒவ்வொரு சவாலும் ஒரு புதிய கண்டுபிடிப்புக்கான வாய்ப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கற்பதற்கான ஆர்வம், அறநெறி பொறுப்பு, தொடர் கற்றல், சமூகப் பொறுப்பு என்ற நான்கு விதமான பண்புகள் இருக்க வேண்டும்” என்றார்.
கவுரவ விருந்தினராக, ஸ்டேட்டிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகவ் அரோரா கலந்து கொண்டு பேசினார். முன்னதாக ஸ்டேட்டிக் நிறுவனத்துடன், விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
நிகழ்வில் விஐடி பல்கலைக்கழகத்தின் துறை வாரியாக முதல் ரேங்க் பெற்ற மாணவர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மேலும், விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களுக்கு ராஜேஸ்வரி விசுவநாதன் நினைவு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. வேந்தர் சிறப்பு விருதுகள், வேந்தர் தங்க விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, ரமணி பாலசுந்தரம், உதவி துணை தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.