புதுச்சேரி சமூக சேவகர் ஆதவனுக்கு 13-வது முறையாக தேசிய விருது!
புதுச்சேரி, ஏப்.26-
புதுச்சேரியைச் சேர்ந்த சமூக சேவகர் ஆதவன் அவர்களுக்கு 13வது முறையாக தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது வழங்கப்பட உள்ளது.
பள்ளிப் பருவம் முதல் கடந்த 47 ஆண்டுகளாக இளைஞர் நலன், சமூகப்பணி மற்றும் இலக்கியத் துறைகளில் அயராது பணியாற்றி வரும் ஆதவன், தேசிய இளைஞர் திட்டத்தின் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். சமூக சேவைக்காக மத்திய அரசின் தேசிய விருதை பிரதமரிடமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருது வழங்கும் விழா வரும் மே 11ஆம் தேதி, விஸ்வ யுவக் கேந்திரா, புது டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சமூக சேவையில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் இந்த தேசிய ஒருமைப்பாட்டு விருதுக்கு தேர்வாகியுள்ள ஆதவன், 13வது முறையாக தேசிய விருது பெறும் ஒரே சமூக சேவகர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மேலும், உலகளவில் 3 சர்வதேச விருதுகள்,
60க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகள், இந்தியாவின் சார்பில் 43 நாடுகளில் பிரதிநிதியாக பங்கேற்று சாதனை படைத்தார்.
சமூக சேவையுடன் மட்டுமல்லாமல், கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர், செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என பல துறைகளில் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ், இந்தி, ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், ரஷ்யன் உள்ளிட்ட பல மொழிகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், அரசு நிகழ்ச்சிகளில் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த சாதனைகள் மூலம் புதுச்சேரி மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.