காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிறுவனர் அழகப்பரின் 117-வது பிறந்த நாள் விழா!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிறுவனர் அழகப்பரின் 117-வது பிறந்த நாள் விழா
சிவகங்கை, ஏப். 08-
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிறுவுனர் வள்ளல் அழகப்பரின் 117-வது பிறந்த நாள் விழா (06-04-2026) அன்று பல்கலைக்கழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 
        காலை 7.00 மணியளவில் வள்ளல் அழகப்பர் நினைவு மரியாதைப் பேரணி, பவநகர் விளையாட்டரங்கத்திலிருந்து தொடங்கி அழகப்பம் நினைவாலயத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.க.ரவி தலைமையில் அழகப்பா கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் வயிரவன் இராமநாதன் மற்றும் அவரது புதல்வி தேவி அலமேலு, பல்கலைக்கழக அதிகாரிகள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் வள்ளல் அழகப்பருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
         அதன் தொடர்ச்சியாக, வள்ளல் அழகப்பர் பிறந்த நாள் விழா சொற்பொழிவு நிகழ்ச்சி பல்கலைக்கழக லெ.சித.லெ.பழனியப்பச் செட்டியார் நினைவு கலையரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.க.ரவி இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றினார். 
        அவர் தமது உரையில் வள்ளல் அழகப்பர் கல்விக்கு ஆற்றிய தொண்டை யாராலும் மறக்கமுடியாது. அழகப்பரால் நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் அழகப்பரின் கொடையால் நிறுவப்பட்டுள்ள பிற கல்வி நிறுவனங்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்பினை விரிவாக எடுத்துரைத்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அழகப்பரின் நிதி உதவியினால் தொடங்கப்பட்ட பொறியியல் கல்லூரியில் தான் பயின்ற போட்டான் கணினிக் கல்வியையும், சென்னை அழகப்பா செட்டியார் தொழிழ்நுட்ப கல்லூரியில் ஜந்தாண்டுகள் ஆய்வில் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டதையும் அதன் பின்னர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-ஆண்டுகள் ஆசிரியப் பணி செய்ததையும், அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் பட்டம் பெற்றதையும் அதனை தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதையும் பெருமையோடு குறிப்பிட்டார். 
        அதனால் மற்ற எல்லாரையும் விட அழகப்பா செட்டியாருக்கு நான் தான் மிகுந்த நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் முறைசார் கல்வி, தொலைதூர கல்வி, இணைய வழி கல்வித்திட்டம், இணைவு மற்றும் உறுப்புக்கல்லூரிகள் ஆகியவற்றில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் படித்து வருவதாகவும் அழகப்பா பல்கலைக்கழகம் தேசிய தர மதீப்பீட்டு குழுவின் இருமை முறையீல் A++ தகுதி பெற்றதற்கும் அழகப்பா பல்கலைக்கழகம் இந்திய மற்றும் உலக அளவில் பல்வேறு தரங்களை பெற்றதற்கும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பங்களிப்போடு அழகப்பா செட்டியாரின் ஆசியும் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
       சரியான கல்வி மற்றும் முறையான ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்குவதே அழகப்பா செட்டியாரின் குறிக்கோளாகும். அவற்றை நிறைவேற்றுவதில் அழகப்பா பல்கலைக்கழகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
           அதோடு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கடந்த 3 ஆண்டுகளில் பனிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். கடையேழு வள்ளல்கள் பற்றி தான் அறிந்திருந்தாலும் உண்மையிலேயே நான் அறிந்த ஒரே கல்விக்கொடை வள்ளல் அழகப்பரே என்று புகழாரம் சூட்டினார்.
         இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஆயுட்கால உறுப்பினர் மற்றும் வள்ளல் அழகப்பரின் பெயரனுமான முனைவர் வயிரவன் இராமநாதன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். வள்ளல் அழகப்பர் அவர்கள் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கல்விக்கு ஆற்றிய சேவையை ஒருபொழுதும் நிறுத்தவில்லை. அவரது 117-வது பிறந்தநாளை கொண்டாடும் இந்நேரத்தில் இதை ஒரு பிறந்தநாள் விழாவாக மட்டும் கருதாமல் நாம் ஒவ்வொருவரும் வள்ளல் அழகப்பரை  நினைவு கூர்ந்து கூர்ந்து அவருக்கு நன்றி கடனை செலுத்தும் நாளாகவும் இதனை கருதவேண்டும்.  
          வள்ளல் அழகப்பர் மாணவர்களுக்கு கல்வியை மட்டும் அளிப்பதில் கவனம் செலுத்தவில்லை படித்த பின்பும் அவர்கள் சிறந்த வேலையை பெறுவதற்கான தொழில்நுட்ப அறிவினை பெறுவதற்கும் உண்டான கல்வியையும் வழங்கினார்.
        அழகப்பரின் கனவுகளில் ஒன்றான மருத்துவக் கல்லூரியை காரைக்குடியில் நிறுவுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
       மதுரையைச் சார்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம்,  உலகத்திலேயே மிகச்சிறந்த வள்ளலான அழகப்பரின் 117-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.