திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை ஆட்சியர் வழங்கினார்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை ஆட்சியர் 
 வழங்கினார்!

திருவண்ணாமலை, மார்ச். 12-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னேற்றத்தை நாடும் வட்டாரம் திட்டத்தின் கீழ் பணியாற்றிய ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், மருத்துவத்துறை, கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், கால்நடைத்துறை மற்றும் ஆவின் போன்ற துறைகளை சார்ந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.
முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டம் (Aspirational Blocks Programme. ABP) என்பது, பின்தங்கிய 500 இந்திய வட்டாரங்களில் சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, வேளாண்மை, அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் நிதிச் சேவைகளை மேம்படுத்தும் ஒரு மத்திய அரசின் திட்டமாகும். இது 'சங்கல்ப் சப்தாஹ்' (தீர்வு வாரம்) மூலம் நிர்வாகத் திறனை அதிகரித்து, பின்தங்கிய வட்டாரங்களை விரைவாக வளர்ச்சியடையச் செய்ய இலக்கு கொள்கிறது.
           மேலும் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வட்டாரங்களை மாநிலத்தின் பிற முன்னேறிய பகுதிகளுடன் சமநிலைக்கு கொண்டு வருவதை இத்திட்டம் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. சுகாதாரம் & ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை & நீர்வலங்கள், நிதிச்சேர்க்கை & திறன் மேம்பாடு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கு இத்திட்டம் முக்கிய பங்காற்றுகிறது.
          அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலை வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் முன்னேற்றத்தை நாடும் வட்டாரம் (Aspirational Blocks Programme) திட்டத்தின் கீழ் சம்பூர்ணதா அபியான் இயக்கம் 2024 ஜீலை மாதம் தொடங்கி செப்டம்பர் 2024 வரையிலான மூன்று மாதங்களில் மொத்தம் உள்ள 40 குறியீடுகளில் தேர்வு செய்யப்பட்ட 6 குறியீடுகளில் 4 குறியீடுகளான நீரிழிவு நோய் குறித்து பரிசோதனை செய்தமைக்கான சதவீதமும், உயர் இரத்த அழுத்தம் நோய்க்கான பரிசோதனை செய்தமைக்கான சதவீதம்,
ஊட்டச்சத்து திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்கள் பெற்ற இணை உணவு சதவீதமும், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் சதவீதம் ஆகிய குறியீடுகளில் தன்னிறைவு அடைந்ததற்காக ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், மருத்துவத்துறை, கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், கால்நடைத்துறை மற்றும் ஆவின் ஆகிய துறைகளை சார்ந்தவர்களுக்கு (சம்பூர்ணதா அபியான் சம்மன் சமரோ (Award ceremony) நிதி ஆயோக் சார்பில் மாநில திட்டக்குழுவால் வழங்கப்பட்ட விருது மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
         இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் டாக்டர் ஆர்.மணி, முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ், துணை இயக்குநர் (காச நோய்) டாக்டர் அசோக், திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பிரகாஷ், மாவட்ட திட்ட அலுவலர் கேசவலு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.