திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் செய்தியாளர் சந்திப்பு !
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் செய்தியாளர் சந்திப்பு
திருவண்ணாமலை, மார்ச். 16-
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அட்டவணையின் படி 30.03.2026 (திங்கள்கிழமை) அன்று முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். 06.04.2026 (திங்கள்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 07.04.2026 (செவ்வாய்கிழமை) அன்று வேட்புமனு பரிசீலனை செய்யும் நாளாகும். 09.04.2026 (வியாழன்கிழமை) வேட்புமனு திரும்ப பெறும் நாளாகும். மேலும் 23.04.2026 (வியாழன்கிழமை) அன்று தேர்தல் நடைபெறும், 04.05.2026 (திங்கள்கிழமை) அன்று வாக்கு எண்ணும் நாளாகும். 06.05.2026 (புதன்கிழமை) அன்று தேர்தல் நிறைவு பெற வேண்டிய கடைசி நாளாகும்.
மேலும் திருவண்ணாமலை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளான செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யார் மற்றும் வந்தவாசி (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் மாலை முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி, தேர்தல் நடத்தை விதி மீறல்கள் மற்றும் தேர்தல் செலவீனங்களை கட்டுபடுத்தவும் 8 சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும் படை (Flying Squad Team) 3 குழுக்களும், நிலை கண்காணிப்புக் குழு (Static Surveillance Team) 3 குழுக்களும், வீடியோ கண்காணிப்புக்குழு (Video Surveillance Team) 1 குழுவும், கணக்கியல் குழு (Accounting Team) 1 குழுவும், வீடியோ பார்வையிடும் குழு (Video Viewing Team) 1 குழுவும், தேர்தல் நடத்தை விதிகள் குழு (Mode Code Conduct), மாவட்ட அளவிலான ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு (Media Certification and Monitoring Committee) என பல்வேறு வகையான குழுக்கள் அமைக்கப்பட்டு களத்தில் இயங்கி வருகின்றன.
மேலும் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. இந்த தேர்தல் கட்டுபாட்டு அறை எண் (Toll Free) 1800-425-7005, வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விளக்கங்கள் அறிய (Toll Free) 1950, தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்த புகார்கள் தெரிவிக்க கைப்பேசி செயலியான C-VIGIL என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கபட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், அனைத்து வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
அரசு அலுவலகங்கள், பொது மற்றும் தனியார் இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களின் படங்கள் பெயர் மற்றும் கட்சி சின்னங்கள் மறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக முடியும் வரை மக்கள் குறைதீர்வு கூட்டம் பொது மற்றும் விவசாயிகள் குறைத் தீர்வு கூட்டம் நடைபெறாது. இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 23.022026 அன்று வெளியிடப்பட்டதில் திருவண்ணாமலைமாவட்டத்தில் 19,19,126 வாக்காளர்கள் இடம் பெற்று இருந்தனர். அதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களை சேர்க்க விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் 06.04.2026 வரை மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்களின் கட்சி சார்பாக பொதுக் கூட்டம், ஊர்வலம், தெருமுனை கூட்டம், வாகனபிரசாரம், தற்காலிக கட்சி அலுவலகம் மற்றும் வீடுதோறும் பிரசாரம் போன்றவற்றை நடத்திட அந்தந்த சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 48 மணிநேரத்திற்கு முன்னரே அனுமதி பெற https://suvidha.eci.gov.in/ac/public/login στη நேரடியாகவோ விண்ணப்பம் செய்யவேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் தெரிவித்தார்.
முன்னதாக அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெவுள்ளதை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.ம.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர் ஆர்.மணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.