தேனியில் திமுக செயற்குழு மற்றும் அறிமுக கூட்டம் ஓபிஎஸ், தங்கதமிழ்ச்செல்வன் பங்கேற்பு
தேனி, மார்ச். 05-
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அறிமுக கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் தனியார் ஹோட்டலில் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட அவைத்தலைவர் பி.டி செல்லபாண்டியன் வரவேற்றுப் பேசினார். திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில்,
"திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்து வந்துள்ளது. இந்திய அளவில் தமிழ்நாடு பொருளாதாரத்தில் 11.8 சதவீதமாக உயர்ந்து முதன்மை மாநிலமாக உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த ஆட்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.
நான் கடந்த ஆண்டு சொன்னதைப் போல் மீண்டும் திமுக ஆட்சி செய்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக தொடர்வார் என்று சொன்னேன். அது நிச்சயம் நடக்கும். தேனி மாவட்டத்தில் திமுகவினர் சுறுசுறுப்பாக களப்பணி செய்து வருகின்றனர். அவர்களோடு சேர்ந்து என்னுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக பயணித்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் களப்பணி தீவிரமாக செயல்படுவார்கள் என நம்புகிறேன்.
வருகிற 7 ந்தேதி திருமங்கலத்தில் தென் மாவட்டத்தில் உள்ள எனது ஆதரவாளர்கள் தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைய உள்ளனர். ஆகையால் தேனி மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்" என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓ.பி.ரவீந்தரநாத், சையது கான்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் எல்.எம். தேனி நகர செயலாளர் பாலமுருகன், பாண்டியன், பெரியகுளம் நகர செயலாளர் முகமது இலியாஸ், போடி நகர செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆஜிப்கான், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் பாண்டியராஜன், தாமரை குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் திமுக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிர்வாகிகளை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.