ஒரு சாதிக்கு தலைவராக இருந்தால் ஸ்டார் வேட்பாளர் ஆகிவிட முடியாது: காட்டுமன்னார்கோவில் பாமக வேட்பாளர் அன்புசோழன் காட்டம்!

ஒரு சாதிக்கு தலைவராக இருந்தால் ஸ்டார் வேட்பாளர் ஆகிவிட முடியாது: 
காட்டுமன்னார்கோவில் பாமக வேட்பாளர் அன்புசோழன் காட்டம்! 

காட்டுமன்னார்கோவில், மார்ச் 31-              கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியை சேர்ந்த பாமக வேட்பாளர் அன்புசோழன், அதிமுக சிதம்பரம் எம்.எல்.ஏ.,  பாண்டியன், பா.ம.க மாவட்ட செயலாளர் செல்வமகேஷ், மாவட்ட தலைவர் கலையரசன் மற்றும் கூட்டணி கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
       காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து என்.டி.ஏ கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் அன்புசோழனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு தொடங்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் அன்புசோழன், தோல்வி பயத்தில் எம்.பி., பதவியை விட்டு விசிக தலைவரே களத்தில் இறங்கி காட்டுமன்னார்கோவிலில் சாதாரண பாமக வேட்பாளராகிய எனக்கு எதிராக போட்டியிடுகின்றார்  விசிக தலைவர்  திருமாவளவன். 
ஏன் இங்கு விசிக சார்பில் வேறு வேட்பாளர்கள் இல்லையா? சிட்டிங் எம்.எல்.ஏ.,விற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியிருக்கலாமே.! விசிக சிட்டிங் எம்.எல்.ஏ., மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தொகுதி மக்களுக்கென்று எதுவும் செய்யவில்லை.  மாறாக இவர்களுக்காக பல தியாகங்களை செய்த சொந்த கட்சி  என்பதால் இம்முறை தோல்வியடைவது நிச்சயம் என்ற அச்சத்தில், தன்னை வெற்றிபெற செய்த கட்சி நிர்வாகிகள், தலித் இளைஞர்களின் உழைப்பையும்,  பல வழக்குகள் வாங்கிய தியாகத்தையும் உதாசீனம் செய்வது மட்டுமல்லாது எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளார் திருமாவளவன்.     
       எனினும் அவருக்கு எதிராக நின்று வெற்றி பெறுவேன். தலித் இளைஞர்கள் பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தொகுதி மக்களின் வாக்குகள் எங்களுக்கு ஆதரவாக உள்ளது.

       தவெக வேட்பாளரை பொறுத்தவரை எங்களுக்கு போட்டியாக கருதவில்லை., சினிமாவை பார்த்து ரசித்து சிரித்து கடப்பதைப் போலவே இதையும் பார்த்து கடக்கிறோம்  என்றார். மேலும் தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், விவசாய தொழிலை பிரதானமாக கொண்டுள்ள காட்டுமன்னார்கோவில் தொகுதியில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் மதிப்பை கூட்டும் விதமாக தவிட்டில் இருந்து கம்ப்ரஸ் கரிதுண்டுகள், அரிசி நொய்யில் இருந்து ரைஸ் வாட்டர் தயாரித்து மூட்டை ஒன்றிற்கு ரூ4 ஆயிரம் முதல் லாபம் பெறும் மதிப்புக்கூட்டு ஆலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். மேலும் பூ விவசாயிகள் பயன் பெறும் வண்ணம் வாசனைத் திரவிய தொழிற்சாலை ஏற்படுத்தி பூ சீசன் இல்லாத காலங்களில் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படாமல் தவிர்ப்பேன்.     
          லால்பேட்டை, ஆயங்குடி இஸ்லாமிய சமூகத்தினர் பொதுமக்களுக்கு உள்ள நீண்ட நாள் கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்த உடனே நிறைவேற்றுவேன்.  
இந்த மண்ணில் பிறந்த எனக்கு  ஒரு வாய்ப்பு கொடுங்கள் 
என்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த அதிமுக, பாமக, பிஜேபி, அமமுக,
தமாகா உள்பட கூட்டணி கட்சியினர் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.