திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
கலெக்டர் பங்கேற்பு
திருவண்ணாமலை, மார்ச். 23-
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார பேரணியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக பொதுமக்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
இவ்விழிப்புணர்வு பேரணியில் மாற்றுத்திறனாளி நபர்கள், சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மனநலம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய இல்லங்களில் உள்ள மாற்றுத்திறனாளி நபர்கள், லைப் லையின் சோல் ப்ரி ஆகிய தொண்டு நிறுவன நிர்வாகிகள், இரங்கம்மாள் காதுகேளாதோர் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உரிமைகள் திட்ட பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள் இவ்விழிப்புணர்வு பேரணியில் கலந்துக்கொண்டு எதிர்வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நபர்கள் முழுமையாக 100 சதவீதம் வாக்களித்திடும் பொருட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் கலை நிகழ்ச்சி வாயிலாக விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அதில்
அமலராக்கினி பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களால் இசை வாயிலாக விழிப்புணர்வு எடுத்துரைத்தனர். மேலும் சுமார் 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி நபர்கள், மாணவர்கள் என் வாக்கு, என் உரிமை. உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம், 100 சதவீதம் வாக்களிப்போம். நேர்மையாக வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன வீடியோ வாயிலாக தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்து தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்களை பார்வையிட்டார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) தனபதி, திருவண்ணாமலை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மாலதி, சோல் ப்ரி தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் செல்வி பிரித்தி சீனுவாசன், திருவண்ணாமலை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.சரவணன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம்பிரசாத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.