காவல்துறை அத்துமீறுகிறதா?
இளைஞர் ஆகாஷ் டெல்சனின் மரணத்திற்கு யார் பொறுப்பு?
சென்னை, மார்ச் 10-
மானாமதுரை பகுதியில் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த இளைஞர் ஆகாஷ் டெல்சன் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மனித உயிரை பாதுகாக்க வேண்டிய சூழலில், இவ்வாறான மரணங்கள் நிகழ்வது நீதியுடனும் மனிதநேயத்துடனும் எவ்விதத்திலும் பொருந்தாத ஒன்று என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஒரு இளைஞன் காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கும் நிலையில் உயிரிழப்பது என்பது ஜனநாயக அமைப்பின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை முழுமையாகக் குலைக்கும் வகையிலானது. சட்டத்தைக் கையில் வைத்திருப்பவர்களே சட்டத்தின் எல்லைகளை மீறுகிறார்களா? என்ற கேள்வி சமூகத்தில் எழுவது மிகுந்த வருத்தத்திற்குரியது மட்டுமல்லாமல், அது ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும்.
இந்தச் சம்பவத்தின் உண்மை நிலையை மறைப்பதோ அல்லது விசாரணையைத் தாமதிப்பதோ இல்லாமல், முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும். இச்சம்பவத்தில் யாரேனும் அதிகாரிகள் தவறாக அல்லது அத்துமீறி நடந்து கொண்டிருந்தால், அவர்கள் மீது எவ்விதப் பாரபட்சமும் இன்றி, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் மனித உரிமை மீறல்கள் என்பது சகித்துக் கொள்ள முடியாத ஒன்று என்பதையும், அது ஒரு அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்பதையும் அரசு உணர வேண்டும்.
உயிரிழந்த இளைஞர் ஆகாஷ் டெல்சனின் குடும்பத்தினருக்கு முறையான நீதியும், நியாயமும் கிடைக்க வேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்கப்படுவதோடு, அக்குடும்பத்தின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வாழ்வாதார உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மக்களின் உயிர் பாதுகாப்பு என்பது அரசின் முதன்மைப் பொறுப்பு என்பதை நினைவில் கொண்டு, இத்தகையத் துயரமான சம்பவங்கள் இனி ஒருபோதும் தமிழ் மண்ணில் நடைபெறாத வகையில், காவல்துறையில் தேவையான சீர்திருத்தங்களையும், கண்காணிப்பு முறைகளையும் அரசு வலுப்படுத்த வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என அகில இந்திய சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் சார்பில் டாக்டர் புரட்சி வி.எஸ்.நாகமூர்த்தி, தனது அறிக்கையில் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.