டிக்கெட்டுக்கான பணத்தை அரசு மானியமாக அளித்தால் அரசாங்கத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு சேவையை தொடர்ந்து செய்வோம் - தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

டிக்கெட்டுக்கான பணத்தை அரசு  மானியமாக அளித்தால் அரசாங்கத்துடன் இணைந்து   பொதுமக்கள் சேவையை தொடர்ந்து செய்வோம் - தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!
   
     வேலூர், பிப்.28-
வேலுார் மாவட்ட  பஸ் உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் சங்க ஆலோசகர் விஜயகோவிந்தராஜன், தலைவர் கணேஷ், செயலாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளரிடம் கூறியதாவது:
   ஒரு லிட்டர் டீசல் 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.63க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது ரூ. 93க்கு விற்னையாகிறது. 8 ஆண்டுகள் கடந்து அதற்கேற்ப பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
   இந்தியாவில் தமிழகத்தில் தான் மிகக் குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டவுன் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5, புறநகர் பஸ்களில் ரூ.7-ஆகவும் உள்ளது.
         டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம், காப்பீடு மற்றும் வரிகள் உயரும்போது, ஒரு பஸ்சை இயக்குவது மிகவும் சிரமமாக உள்ளது. மக்கள் சேவையைத் தொடர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். பஸ் கட்டண உயர்வு மாநில அரசின் கையில் உள்ளது. அவர்கள் நிர்ணயிக்கும் எந்த ஒரு கட்டண உயர்வையும் தனியார் நிறுவனங்கள் முறையாகக் கடைபிடிக்கும்.      
       எனவே, தமிழக அரசு எங்களுக்கு ஒரு நல்ல தீர்வை வழங்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
கார்களுக்கு இருப்பது போல பஸ்களுக்கும் மாதாந்திரக் கட்டண முறையில் சுங்கச்சாவடிகளைக் கடக்க வழிவகை செய்ய வேண்டும். அரசு பஸ்களை மின்சார வாகனங்களாக மாற்ற வழங்கப்படும் மானியத்தை, தனியார் பஸ்களுக்கும் வழங்க வேண்டும்.
அரசின் மகளிர் இலவச பஸ் திட்டத்தை நாங்கள் குறை கூறவில்லை, இது மக்களுக்கான பொதுநலத் திட்டம். ஆனால், இதனால் தனியார் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வருவாய் கணிசமாகக் குறைந்துவிட்டது. தனியார் பஸ்களில் பெண்களுக்கு இலவசமாக பயணிக்க வாய்ப்பு அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.     
        டிக்கெட்டுக்கான பணத்தை அரசு எங்களுக்கு மானியமாக அளித்தால் அரசாங்கத்துடன் சேர்ந்து கைகோர்த்து பொதுமக்கள் சேவையை தொடர்ந்து செய்வோம்.
தமிழகத்தில் 6 ஆயிரம் தனியார் பஸ்கள் உள்ளது. வேலுார் மாவட்டத்தில் 146 பஸ்கள் இயக்கப்படுகிறது. 
        இந்த தொழிலை நம்பி தமிழகத்தில் சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர். இந்த தொழில் நலிவடைந்தால் இந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழக அரசு தனியார் பஸ்களுக்கு கட்டண உயர்வை அளிக்க வேண்டும்.
பொது போக்குவரத்துக்கு என தனி டீசல் சலுகை மற்றும் வரி சலுகையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.