தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினரை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவுடன் சந்திப்பு
கன்னியாகுமரி, பிப். 07-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொருளாளர் இப்ராஹிம், துணை பொதுச்செயலாளர் அப்துல் ரஹீம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் 05.02.2026 அன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி எம்.பி. உள்ளிட்ட குழுவினரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். 
       அதில் முஸ்லிம்களுக்கு 5%  உள் இடஒதுக்கீடு உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத உள் இடஒதுக்கீடு, தற்போதைய சூழலில் சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை.
     முஸ்லிம்களின் உள் இடஒதுக்கீட்டு அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) தொடர்ச்சியாக அறப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தில் "முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும்" என்ற வாக்குறுதியை அளித்து, சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைப் பெற்றது.
தற்போதைய அரசு சிறுபான்மை நலனில் காட்டி வரும் அக்கறையை நாங்கள் வரவேற்கும் அதேவேளையில், இந்த முக்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது முஸ்லிம் மக்களிடையே ஒருவித வருத்தத்தையும், ஏமாற்றத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.
      ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் பயன்கள் எந்த அளவிற்குச் சமுதாயத்தைச் சென்றடைந்துள்ளது என்பதை அரசு ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிடுவதுடன், முஸ்லிம்களுக்கான உள் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும். முதல் கட்டமாக முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் உள் இடஒதுக்கீடு உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்படும் என்ற வாக்குறுதியை 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வெளிவர உள்ள திராவிட முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கையில் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
       வட்டியில்லா கடன் உதவி, தமிழகத்தில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினர் கல்வி கற்பதற்கும், சிறு தொழில் தொடங்கவும் தமிழக அரசு பல்வேறு கடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், அரசின் சார்பாக வழங்கப்பட்டு வரும் கடன்களுக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது. இஸ்லாமிய மார்க்க கோட்பாடுகள் வட்டி இல்லா பொருளாதாரத்தை வலியுறுத்துவதால் சமூக நீதி அரசு வழங்கும் உதவிகள் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தை முழுமையாக அடைவதில்லை. இதனால் பல ஏழை, எளிய முஸ்லிம் மாணவர்கள் மற்றும் சிறுதொழில் முனைவோர் அரசின் சலுகைகளைப் பயன்படுத்த முடியாமல் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். 
      இதைக் கவனத்தில் கொண்டு முஸ்லிம்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு மூலம் வழங்கப்படும் அனைத்துக் கடன்களையும் முழுமையான வட்டியில்லா கடன்களாக மாற்றி வழங்க ஆவண செய்ய வேண்டும். இதை தேர்தல் வாக்குறுதியாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
         கடந்த 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் சுமார் 636 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் முயற்சியால் முஸ்லிம் சிறைவாசிகள் சிலர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நன்றியுடன் நினைவு கூருகிறது. ஆனாலும், நீதியரசர் ஆதிநாதன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மீதமுள்ள சிறைவாசிகள் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.
       25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் முதியவர்கள். கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விடுதலை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. நீண்ட கால விடுப்பில் (பரோல்) அனுப்பும் உரிமை மாநில அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதையும் முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், 20 ஆண்டுகளைக் கடந்த முஸ்லிம் சிறைவாசிகளையும், ஏனைய சிறைவாசிகளைப் போல மனிதாபிமான அடிப்படையில் பாரபட்சமின்றி விடுதலை செய்யத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை முஸ்லிம்கள் எதிர் பார்க்கிறார்கள் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
         தமிழகத்தின் மக்கள் தொகையில் சுமார் 7 சதவீதத்திற்கும் மேலாக வாழும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது, தற்போதைய சட்டமன்றத்தில் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பது கவலையளிக்கிறது.
234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத்தில், வெறும் 7 முஸ்லிம் உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். இது மொத்த உறுப்பினர்களின் 3% மட்டுமே. முஸ்லிம்கள் அரசியல் அதிகாரம் பெறும் வகையில் சட்டமன்றத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் மக்கள் தொகை விகிதாச்சாரப்படி உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளின் சமூகக் கடமையாகும்.
       எனவே, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக வின் வேட்பாளர் பட்டியலில் உரிய பிரதிநிதித்துவத்தை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர்கள் காஞ்சி சித்திக், ஐ.அன்சாரி, பெரோஸ்கான் உடனிருந்தனர்.

Comments