கடலூர் மாவட்டம் கடலூர் நகர்ப்புற இடங்களில் வசிக்கும் 650 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் வழங்கல்

கடலூர் மாவட்டம், கடலூர் நகர்ப்புற இடங்களில் வசிக்கும் 650 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார்  வழங்கல் 

கடலூர், பிப்.10-கடலூர் நகர அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில் குமார் இ.ஆ.ப., கடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரிராஜா, துணைமேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் கடலூர் நகர்புற இடங்களில் வசிக்கும் 650 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினை இன்று (10.02.2026) வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார், தெரிவிக்கையில்,        

       தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, பொதுமக்கள் அனைவருக்கும் நிரந்தர குடியிருப்பு இருக்கும் வேண்டும் என்ற அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் தகுதிவாய்ந்த நிலமற்ற பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

      தேவனாம்பட்டினம் கிராமத்தில் 2004ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் கட்டித்தரும் நோக்கத்தில் மேற்படி நகர வார்டு-6 பிளாக்-46 இதற்குட்பட்ட பட்டாதாரர் பெயரில் உள்ள 8.3024.5 சமீ பரப்பு நிலத்தினை தமிழ்நாடு அரசின் பெயரில் கிரையம் பெற்று, "சுனாமி குடியிருப்பு" என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விடத்தில் 648 நபர்களுக்கு 2007ஆம் ஆண்டு தொண்டு நிறுவனம் மூலம் சுனாமி வீடுகள் கட்டப்பட்டு, 2014-2015ஆம் ஆண்டு ஒப்படை நமூனா வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இ-பட்டா வழங்கும் நோக்கத்தில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இன்றைய தினம் 375 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 273 நபர்களுக்கும் இ-பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

       பொதுமக்களின் நீண்டகால பட்டா வழங்கும் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில்,  மஞ்சக்குப்பம் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் நிரந்தர வீடு கட்டி வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவினை ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் தளர்வு செய்தும், வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நீதிமன்ற அரசாணை 97இன் படி மஞ்சக்குப்பம் பகுதியில் 171 நபர்களுக்கும் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் 104 நபர்களுக்கும் என மொத்தம் இன்றைய தினம் கடலூர் நகர்புற இடங்களில் வசிக்கும் 650 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார்,  தெரிவித்தார்.

          இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணியகோட்டி, கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், வருவாய் வட்டாட்சியர் மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments