வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்
வேலூர், ஜன. 20-
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காலம் முறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ருக்மணி , மாநிலத் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் மரகதம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ. 5 லட்சமும், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மறியல் போராட்டம் காரணமாக சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வாகனங்களை மாற்றுப் பாதையில் அனுப்பி வைத்தனர்.
Comments
Post a Comment