சிங்கம்புணரியில் இன்ஸ்டா பிரபலம் புத்தூர் பாண்டி நுடவைத்தியர் அதிரடி கைது,தைல பாட்டில்கள், எண்ணெய் பச்சை மருந்து பறிமுதல்
முறையாக அனுமதி பெறாமல் மருத்துவம் பார்த்ததால் கிளினிக்கிற்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை
சிவகங்கை,ஜன.21 -
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இன்ஸ்டா மூலம் பிரபலமான நுட வைத்தியர் புத்தூர் கட்டு பாண்டி என்ற நெடுஞ்செழியன் வீடு, கிளினிக்கில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். தெக்கூரை சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவர் புத்தூர் கட்டு பாண்டி என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக சிங்கம்புணரியில் நுட வைத்தியம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக சமூக ஊடகத்தில் நேரலையில் பேசிக்கொண்டே சிகிச்சை அளித்தார்.அதன் மூலம் இவர் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் கூட பிரபலமானார். இவரிடம் சிகிச்சை பெறவும், தைலம் வாங்கவும் தினமும் ஏராளமானோர் கூடினர். மேலும் தன்னை 18 சித்தர்களில் ஒருவராகவும், தன் உடம்பை தொட்டு வணங்கினால் சிகிச்சை பெறுவோர்க்கு பலன் கிடைப்பதாகவும் கூறி வந்தார். ஒரு நாளைக்கு 50 நபர்களில் இருந்து 100 நபர்கள் வரை டோக்கன் கொடுத்து வைத்தியம் பார்த்த நிலையில் மற்றவர்களுக்கு ரூ 600 ரூபாய் ரூ 800 விலை கொண்ட 200 மில்லி தைல பாட்டிலை கொடுத்து அனுப்பினார்.இந்நிலையில் இவரது சிகிச்சை மற்றும் அவர் கொடுக்கும் தைலம் குறித்து அரசுத்துறை வட்டாரத்தில் சந்தேகம் எழுந்தது.அதன் அடிப்படையில் இன்று மாலை சப்-கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் தலைமையில், திருப்பத்தூர் டி.எஸ்.பி., செல்வகுமார், சுகாதாரத்துறை நலப்பணிகள் இணை இயக்குனர் அருள்தாஸ் தாசில்தார் நாகநாதன் ஆகியோர் வீடு கிளினிக்கில் சோதனை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் சுகாதார நலத்துறை இணை இயக்குனர் பொறுப்பு அருள்தாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆய்வில் அவரது உரிமத்தில் சந்தேகம் இருப்பதாகவும்,கால் கைகளில் தேய்பதற்கு பயன்படுத்தும் தைல பாட்டில்களில் தயாரிப்பு தேதி,காலாவதி தேதி தைலம் தயாரிக்கும் பொருட்களின் விபரம் இல்லாததால் தைல பாட்டில்கள்,எண்ணெய் வகைகள், பச்சை மூலிகை போன்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்து கிளினிக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் போலி நுட வைத்தியர் புத்தூர் கட்டு பாண்டியை போலீசார் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புத்தூர் கட்டு பாண்டி தன்னை விளம்பரபடுத்துவதற்கு கணிசமான தொகை செலவழித்து விளம்பரம் செய்தார். இதனால் தினசரி 300க்கும் மேற்பட்டோர் தினசரி வந்து செல்கின்றனர்.தைல விற்பனையும் படு ஜோராக விற்பனை ஆனது. பொதுமக்களுக்கு அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் நிலமையை எடுத்து கூறி விளம்பரத்தை பார்த்து ஏமாற வேண்டாம் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.அவரது உரிமத்தில் குளருபடி உள்ளதாக சார் ஆட்சியர் கூறிய நிலையில் உண்மையிலேயே நுட வைத்தியர் தானா என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
Comments
Post a Comment