செஞ்சி அரசு உருது உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டி முஸ்லிம் மக்கள் கழக நிறுவனர் முனைவர் ச.சு. ஜைனுதீன் வலியுறுத்தல்!
செஞ்சி அரசு உருது உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டி
முஸ்லிம் மக்கள் கழக நிறுவனர் முனைவர் ச.சு. ஜைனுதீன் வலியுறுத்தல்!
செஞ்சி, ஜன.21-
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட செஞ்சி அரசு முஸ்லிம் உருது உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச. சு. ஜைனுதீன் தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
செஞ்சியில் வசித்து வரும் உருது பேசும் இஸ்லாமிய மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வரும் இந்த பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில், 2018 ஆம் ஆண்டு பொதுமக்கள் பங்களிப்பாக ரூபாய் 2 லட்சம் அரசு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை கல்வித்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மெத்தனமாக செயல்பட்டு வருவது வருத்தம் அளிக்கிறது.
தமிழகத்தில் உருது மொழிக்கு முதன்முதலில் இடஒதுக்கீடு வழங்கிய பெருமை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் சாரும் என்பதை உருது பேசும் இஸ்லாமியர்கள் நன்றியுடன் நினைவு கூர்கிறார்கள்.
மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுத்து, பெண்கள் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி வரும் பெருமை தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கே உரியது. இஸ்லாமியர்களை தொப்புள்கொடி உறவாக அரவணைத்த இயக்கம் திமுக என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அதன் அடிப்படையில், செஞ்சி அரசு உருது உயர்நிலைப் பள்ளியை இந்த கல்வி ஆண்டிலேயே மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி, உருது பேசும் இஸ்லாமிய மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், சென்னை சேப்பாக்கத்தில் முஸ்லிம் மக்கள் கழகம் மற்றும் அனைத்து இயக்கங்கள், கட்சிகளை இணைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை அரசுக்கு முன்னறிவிப்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Comments
Post a Comment