கேஸ் சிலிண்டர் வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி
திருவண்ணாமலை ஆட்சியர் வழங்கினார்
திருவண்ணாமலை, ஜன. 20-
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த இனாம்காரியந்தல் கிராமத்தை சேர்ந்த கலா, க/பெ. பரமசிவம் என்பவரின் குடும்பத்தினருக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், திருவண்ணாமலை வட்டம், பாவுப்பட்டு ஊராட்சியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
மணலூர்பேட்டை கிராமம், தென்பென்ணை ஆற்றில் நேற்று முன்தினம் (19.01.2026) இரவு சுமார் 7.30 மணியளவில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவின்போது பலூன்களை நிரப்பும் கேஸ் சிலிண்டர் (Hydrogen Gas Cylinder) எதிர்பாராதவிதமாக வெடித்ததில் திருவண்ணாமலை மாவட்டம், வெங்காயவேலூர், இனாம்காரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த கலா (வயது 55) க/பெ.பரமசிவம் உயிரிழந்தார். மேலும் இவ்விபத்தில் காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் 18 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மணலூர்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த இனாம்காரியந்தல் கிராமத்தை சேர்ந்த கலா, க/பெ.பரமசிவம் என்பவரின் குடும்பத்தினருக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்து ரூபாய் மூன்று இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
Comments
Post a Comment