திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா!
திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியின் 55-வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் Lion. Dr. K. ரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.
கல்விப் பேரணியுடன் தொடங்கிய இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெ. பாலகுருசாமி வரவேற்புரை நிகழ்த்தி பட்டமளிப்பு விழா அறிக்கையினை சமர்ப்பித்தார்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 46-வது குருமகா சந்நிதானம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு 2019-2022 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற 1093 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இவர்களில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் 964 மாணவர்கள். முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் 129 மாணவர்கள். பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றிய தவத்திரு பொன்னம்பல அடிகளார்", நேற்றைய துன்பத்தை இன்றைய
இன்பமாகக் காட்டுவதற்கான ஒரே வழி கல்வி எனும் செல்வமே" என்று மாணவர்களுக்குக்
கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார். ஸ்டீபன் ஹாக்கின்ஸ், அறிஞர்
அண்ணா, பகத்சிங் போன்ற அறிஞர்களின் வாழ்வில் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தினைச்
சிறுகதைகளாக எடுத்துக் கூறிப் புத்தகம் வாசிப்பதன் அவசியத்தை மாணவர்களுக்கு
உணர்த்தினர். மனிதன் கால்களால் நடக்காமல் கருத்துக்களால் சிந்தனையால் நடக்க வேண்டும் என்றும் பட்டம் பெறுவது சமூகத்தில் தங்களின் அடையாளத்தை
வெளிப்படுத்துவதற்கே என்றும் கூறி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
"கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்ற வள்ளுவர் கூற்றிற்கேற்ப
மனிதனின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான ஒரே வழி கல்வி என்பதை வலியுறுத்தினார். எல்லாப்புகழும் பெருமையும் ஆசிரியரையே சாரும் என்று பெருமிதத்தோடு ஆசிரியரை உயர்த்திப் போற்றினார். மேலும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் கல்விச்சிந்தனையை மாணவர்கள் உள்வாங்கி வாழ்வில் சிறக்க வேண்டும் என்றும் தாழ்ந்து கிடக்கும் நம் மக்களை உயர்த்தும் ஒரே கருவி கல்வி என்று கூறிய விவேகானந்தரின் வாசகத்தினையும் மனதில் உறுதிமொழியாகக் கொண்டு வாழ வேண்டும் என்றும் கூறி இன்று பட்டம் பெறும் மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என வாழ்த்தி உரை நிகழ்த்தினார்.
விழாவில் ஜி.டி.என். கலைக்கல்லூரியின் இயக்குநர் டாக்டர் துரை ரெத்தினம், அறங்காவலர் V.நாராயணராஜு, கல்வி இயக்குநர் Dr. N. மார்க்கண்டேயன், துணை முதல்வர்கள் Ν. சகுந்தலா, Dr. U. நடராஜன், பதிவாளர் C.சின்னக்காளை, ஆலோசகர் Dr. S. ராமசாமி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் Dr. மதிவாணன், தேர்வு அலுவலர் சீனிவாசன், புலத்தலைவர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
Comments
Post a Comment