தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பைகள் தங்கு தடையின்றி தாராளமாக பயன்பாட்டில் உள்ளது! அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்த கடலூர் மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமா?

         தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பைகள் தங்கு தடையின்றி தாராளமாக பயன்பாட்டில் உள்ளது!
        அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்த கடலூர் மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமா?
கடலூர், பிப்.03-தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பைகள் தங்கு தடையின்றி தாராளமாக பயன்பாட்டில் உள்ளது.
அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்த கடலூர் மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமா? என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
      ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் (நெகிழி) பொருள்கள் உற்பத்தியாகும் பொழுது  துவங்கும் நச்சுத் தன்மை அதன் ஆயுள் முழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் கலாச்சாரம் நமக்கானது அல்ல. சமீப காலமாக இதைப் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. நாகரீகம் என்ற பெயரில் மக்களை சோம்பேறிகளாக்கி உள்ளது.
 ‌‌     ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பொருட்கள் எளிதில் மக்கக் கூடியதும் அல்ல. இவை நீர் நிலைகளில், நீர்வழிப் பாதைகளில் அடைத்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.  மண்ணின் காற்றோட்ட தன்மை மற்றும் மண்ணின் நீர் புகும் தன்மையை தடுக்கிறது.
    இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம். ஏற்கனவே, நீர்நிலைகளை அழித்ததால் வெள்ளப் பெருக்கு. மண்டி நீர் பரவும் தன்மையை தடுத்ததால் மண்வளம் பாதிப்பு. எரித்தால் இதிலிருந்து வெளியாகும் நச்சுப் வாயுகள் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை உருவாக்கக்கூடிய அபாயம் உள்ளது. 
      ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழி பொருட்கள் கடலில் குவிந்துள்ளது என்ற செய்தியும், இது கடல் வாழ் உயிரினங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி, இன்று கடலிலிருந்து கிடைக்கும் மீன்களிலும், இந்த பிளாஸ்டிக் பொருள்களின் எச்சங்கள் உள்ளது எனவும், மனித ரத்தத்தில் கலந்துள்ளது எனவும், தாய்ப்பாலில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் உள்ளதாக சமீப கால ஆராய்ச்சிகள் அதிர்ச்சித் தகவலை  தெரிவிக்கின்றன.
       மேலும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழி பொருள்களை தடை செய்த நமது அரசு கடுமையாக நடைமுறைப்படுத்தாத நிலையே தொடர்ந்து உள்ளது. 
    அதிலும், குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சர்வ  சுதந்தரமாய் இதன் புழக்கம் உள்ளது. தெருவோரக் கடைகள் முதல் பெரு வணிக நிறுவனங்கள் வரை இந்த ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழி பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.
     அரசின் பல்வேறு துறைகளும் இதை தடுக்க, கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கும் நிலையில், எப்படி இன்றும் சிறு வணிகர்கள் முதல் பெரு வணிக நிறுவனங்கள் வரை இதன் பயன்பாடு உள்ளது. இந்த பொருள் எப்படி இவர்களுக்கு கிடைக்கிறது என்பது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் பின்னணி ரகசியம் என்ன. யார் இந்த ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழி பொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். அவர்களுக்கான அரசியல், பொருளாதார பின்னணி என்ன? ஏன் இதை அரசு உற்பத்தியிலேயே தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை? என்றெல்லாம் சுற்றுச்சூழல் மீதும், எதிர்கால சந்ததிகள் மீதும் அக்கறையுள்ள சாமானிய மக்களும் கேள்வி எழுப்புகிறார்கள்.
    கடந்த பத்து தினங்களுக்கு முன்பு கடலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பெண்ணை ஆற்றங்கரையில் ஆற்றுத் திருவிழா நடைபெற்றது.  அப்போது  அருகாமை ஊர் ஆலயங்களில் இருந்தும் ஏராளமான சாமிகள் ஊர்வலமாக வந்து வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவிற்கு கடலூர் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். எனவே, இங்கு சிறு சிறு கடைகளும் நிரம்பி இருக்கும்.
        இந்நிலையில், இந்த திருவிழாவில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப்பை பயன்படுத்தப்பட்டன என்பதற்கு சான்றாக அந்த பகுதியில் இன்று கூட சென்று பார்த்தால் பல வண்ணங்களில் இந்த நெகிழி பைகள் தூக்கி எறியப்பட்டு,  அப்புறப்படுத்தப்படாமல் இருக்கிறது.
     தடை செய்யப்பட்ட  ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப்பைகள் எப்படி இவ்வளவு அதிக அளவு இந்த திருவிழாவில்  பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த திருவிழா நடைபெற்ற இடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அருகிலேயே உள்ளது.  பல துறை அலுவலகங்களும் இங்குதான் செயல்படுகிறது. இந்த திருவிழாவிற்காக நூற்றுக்கணக்கான காவல்துறையினரும் பாதுகாப்பிற்காக இருந்தார்கள்.
 மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் இந்தப் பகுதியில் வலம் வந்தார்கள். இந்நிலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழி பொருள்களை இந்தப் பகுதியில் பயன்பாட்டை தடுக்க தவறியது ஏன்?
     கடலூரின் மிக முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்றான இந்த ஆற்றை மாசுபடுத்தக் கூடிய இந்தச் செயலை தடுக்க தவறியது ஏன்? மாநகராட்சி நிர்வாகமும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் ஏன் இதை கண்டு கொள்ளவில்லை. தமிழக அரசின் தடை உத்தரவை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு இவர்களுக்கு இல்லையா?
   மேலும், 
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட எல்லையான அண்ணாகிராமம் ஒன்றியத்திற்குட்பட்ட, புகழ்பெற்ற கண்டரக்கோட்டை பெண்ணை ஆற்றுத் திருவிழாவிலும்       
இந்நிலையே உள்ளது.
தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் நடைமுறையில் உள்ளதா.....
     நமது இயற்கையின் வளங்கள் மீதும், நீர் ஆதாரங்கள் மீதும், சுற்றுச்சூழல் மீதும் அக்கறையோடு தமிழக அரசு பிறப்பித்த ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழி பொருள்களை தடை செய்ய இனியாவது மாவட்ட நிர்வாகமும், கடலூர் மாநகராட்சியும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் கண்டுகொள்ளுமா என்ற எதிர்பார்ப்புடன் கடலூர் மக்கள்.

Comments