கொட்டும் மழையில் நனைந்து கொண்டு வரும் தனது உதவியாளரை உடன் அணைத்து குடை பிடித்து அழைத்துச் சென்ற ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன்!பாராட்டு மழை குவிந்த வண்ணமாய் உள்ளது...

கொட்டும் மழையில் நனைந்து கொண்டு வரும் தனது உதவியாளரை உடன் அணைத்து குடை பிடித்து அழைத்துச் சென்ற ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன்!
பாராட்டு மழை குவிந்த வண்ணமாய் உள்ளது...
ராமநாதபுரம், டிச.17-
தனக்கு கீழ் பணிபுரிபவர்களும் மனிதர்கள் தான் என்பதை மனதில் நிலை நிறுத்தி செயல்படுபவர்களை காண்பது என்பது அத்தி பூ பூத்தது போன்றது. அதிலும் குறிப்பாக, நமக்காக..நம்முடன் இருப்பவர் கஷ்டப்பட்டு நம்மை பாதுகாப்பது எந்த விதத்திலும் நியாயமாக இருக்காது என எண்ணி தம்மால் முடிந்ததை உதவிடுவது மிகப்பெரிய காரியம்.
         குறிப்பாக, மாவட்டத்திற்கே முதன்மை பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இப்படியொரு சிந்தனை எழுவது மகிழ்ச்சிக்குரியது...
         இதனிடையே தென் வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்ட கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்து இருந்தது.
       இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் வரும் 26-ந் தேதி செவ்வாய்கிழமை ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, பக்தர்கள் வருகைக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் கோயிலுக்கு நேரில் வருகை புரிந்த போது திடீரென மழை பெய்யத் துவங்கியது. இதனையறிந்த அவருடைய உதவியாளர் மாவட்ட ஆட்சித் தலைவர் நனைந்துவிடாமல் இருக்க குடை பிடித்தபடி நடந்து வந்துள்ளனர்.
         ஆய்வு குறித்து ஆலோசனை கூறிக் கொண்டு வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் திடீரென பார்த்து உதவியாளர் நனைந்து வருவதைக் கண்டு திடீரென குடையை அவர் வாங்கி தனது வலது கையால் பிடித்துக் கொண்டு, இடது கையால் அவரை அணைத்து அழைத்து சென்றது அவருடன் வந்த அதிகாரிகள் உள்பட பொதுமக்கள் அனைவரும் பரவசமடைந்து வியக்க பார்த்தனர்.
       தனது உதவியாளரை அணைத்து குடை பிடித்து அழைத்துச் சென்றது வைரலாகி வருவதுடன் அனைவரும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரனின் எண்ணத்தையும்.. செயலையும்... மகிழ்ந்து பாராட்டிய வண்ணமாய் உள்ளனர்.

Comments