கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில்1,736 மாணவர், மாணவியர்களுக்கு பட்டம் வழங்கும் விழா!தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு பட்டம் வழங்கி சிறப்பிப்பு!!
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில்
1,736 மாணவர், மாணவியர்களுக்கு பட்டம் வழங்கும் விழா!
தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு பட்டம் வழங்கி சிறப்பிப்பு!!
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ், கோவை நவஇந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் 33-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவிற்கு, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் தலைமை தாங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை,அறிவியல் கல்லூரி முதல்வர் -செயலர்,முனைவர் பி.எல்.சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு,படிப்பில் சிறந்து விளங்கி ரேங்க் பெற்ற மாணவர், மாணவியர்கள் உள்பட 1,488 இளநிலை, 248 முதுநிலை பட்டப் படிப்புகளில் தேர்ச்சிபெற்ற1,736 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் மாணவர் - மாணவியர்கள் மனதை கவர்ந்து ஈர்க்கும் வகையில் எளிய முறையில் பேசியதாவது :
இன்றைய தினம் மாணவர்களாக இருந்த நீங்கள் பட்டதாரிகளாக மாறிய தினம். அறிவாற்றல் என்பது புத்தகங்களில் இருந்து பெறுவது மட்டுமல்ல, வெளியுலகில் இருந்தும் பெறுவதாகும்.
நீங்கள் எந்தத் துறையாக இருந்தாலும் அதில் இருந்து கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன.
ஒருவருக்குப் பணி எவ்வளவு முக்கியமானதோ, அந்த அளவுக்கு கல்வியும் முக்கியமானது. கற்றல் என்பது வாழ்க்கை முழுவதுக்குமான தொடர் நிகழ்வு.
இதுபுத்தகங்கள், மனிதர்கள், சமுதாயத்தில் இருந்து அறிந்துக் கொள்வதையும் குறிக்கும்.
நம்முடைய வாழ்வில் ஒழுக்கம் மிகமிக முக்கியம். இதில் அகஒழுக்கம் மிகவும் முக்கியம். புறஒழுக்கம் செயற்கையானது. வாழ்வியல் திறன் ஒவ்வொருவரையும் நல்வழிப்படுத்தக் கூடியது.
கடின உழைப்பு, விவேகம், தன்னம்பிக்கை, சுயஊக்கம், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுதல், சமயோஜித அறிவு, தைரியமாக பிரச்சினைகளை எதிர் கொள்ளுதல், நேரத்தை நிர்வகித்தல், கவனம் செலுத்துதல், தொடர்பு கொள்ளும் அறிவு போன்றவை நம்மை வெற்றியாளர்களாகமாற்றும் பண்புகளாகும் என எளிமையாக பேசி மாணவர் - மாணவியர்களை உற்சாகப்படுத்தினார்.
விழாவில், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரிய பெருமக்கள், பெற்றோர்கள், மாணவர், மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
பட்டம் பெற்ற மாணவர் - மாணவியர்களுக்கு குடும்பத்தினர்கள், கல்வி ஆர்வலர்கள் பாராட்டி மகிழ்ந்த வண்ணமாய் உள்ளனர்.
Comments
Post a Comment