ஏழை தலித் பெண் தொழிலாளர்களை சுரண்டிக் கொழிக்கும் புதுச்சேரி ஹைடிசைன் நிர்வாகத்தினரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் முற்றுகை போராட்டம்!
ஏழை தலித் பெண் தொழிலாளர்களை சுரண்டிக் கொழிக்கும்
புதுச்சேரி, அக்.29-புதுச்சேரி, ஒதியம்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் ஹைடிசைன் என்ற நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டு ஏழை பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் இனப் பெண்களை தொழிலாளர்களாக கொண்டு தோல் பொருட்களை உற்பத்தி செய்து உலக அளவில் சந்தையை உருவாக்கி மிகப் பெரிய அளவில் வியாபாரம் நடத்தி வருகின்றது.
மிக அதிக விலைக்கு விற்கப்படும் இந்நிறுவன தோல் பொருட்களை உற்பத்தி செய்கின்ற தொழிலாளர்களுக்கு அவர்களின் அறியாமையையும், ஏழ்மையையும் பயன்படுத்தி சொற்பமான ஊதியம் வழங்கி மிக மோசமாக சுரண்டப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த சுரண்டலுக்கு ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகளும், சில அரசியல் புள்ளிகளும் துணையாக இருந்து வருகின்றனர். தொழிலாளர்களை ஒடுக்கி தாம் அடித்த கொள்ளை லாபத்தை வைத்து நாட்டின் பல்வேறு இடங்களில் இதன் கிளைகளும் புதுச்சேரியின் ஒயிட்டவுன் பகுதியில் பிரம்மாண்டமான ஸ்டார் ஹோட்டலும் உருவாகிவுள்ளன.
35 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஸ்கில் தொழிலாளர்களுக்கு சொற்ப சம்பளம் வழங்கப்படுவது என்பது கொடுமையானது. அத்துடன் 55 வயதிலேயே சட்டத்திற்கு புறம்பாக அவர்களின் உழைப்பை சுரண்டிக் கொண்டு அவர்களை எவ்வித நிதியுதவியுமின்றி வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். இத்தனை தொழிலாளர் உரிமைச் சட்டங்கள் இருந்தும் கொத்தடிமைப்போல் இத்தொழிலாளர்கள் நடத்தப்படுகிறார்கள்.
அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச கூலி சட்டத்தையும் இவர்கள் மதிப்பதில்லை.
இந்த நிலையில் தான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்க வேண்டிய போனஸ் தொகையை முடிவு செய்வதிலும் அலட்சியம் காட்டி தான்தோன்றித்தனமாக நிர்வாகம் நடந்து கொண்டுள்ளது.
சென்ற ஆகஸ்ட் 11–ஆம் தேதி போனஸ் பேச்சுவார்த்தைக்கு கடிதம் கொடுத்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில், சங்க பிரதிநிதிகள் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது கொரோனாவிற்கு முன் ஆண்டு தரப்பட்ட 19.25 சதவீத போனஸ் தொகையை, கொரோனாவை காரணம் காட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக 8.33 சதவீதம் தொகையாக குறைத்துக் கொடுத்து தொழிலாளர்களை ஏமாற்றி உள்ளதையும், இதுசம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதையும் சுட்டிக்காட்டி, கடந்த இரண்டு ஆண்டுகள் கொடுத்த போனஸ் தொகை தொடரக்கூடாது என்றும் இவ்வாண்டுக்கு 22.50 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
பின்னர், செப்டம்பர் 8–ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் ஒரு வாரத்தில் (30.10.2023) அன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து தீர்வு காணப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் எவ்வித முன் அறிவிப்புமின்றி, மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் நிர்வாகம் சார்பில் அவர்களாகவே முடிவு செய்து 8.33 சதவீதம் மட்டுமே போனஸ் தொகை தரப்படும் என்றும், அத்தொகை தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்ப இருப்பதாகவும் குறிப்பிட்டு கடிதம் அனுப்பி இருப்பது நிர்வாகத்தின் தன்னிச்சையான முடிவாகும். இதனை தொழிற்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
சென்ற ஆண்டு தொழிலாளர் துறையின் சமரச மையம் மூலம் நடந்த பேச்சு வார்த்தையின் பொழுது இப்படித்தான் தானாக 8.33 சதவீதம் முடிவு செய்து தொழிற்சங்க அனுமதியின்றி தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பியதுபோல் இந்த முறையும் அனுப்பக்கூடாது என்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கம் சார்பில் முன்வைத்தும் நிர்வாகம் தானாகவே இந்த முடிவை எடுத்துள்ளது என்பது தொழிற்சங்கத்தையும், தொழிலாளர்களையும் அலட்சிப்படுத்துவதாகும்.
இதுசம்பந்தமாக முத்தரப்பு கமிட்டி தான் முடிவு செய்ய வேண்டும். நான் நினைச்சது தான் இந்த அரசாங்கம் என்ற நிலையில் தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி (HR) நாம் கொடுக்கும் போனஸ் தொகையை இந்த தொழிலாளர் நாய்கள் வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள் என்று மிகவும் இழிவாக பேசியுள்ளார். தொழிலாளர்களின் தன்மானத்தையும், சுய கௌரவத்தையும் கெடுக்கும் நோக்கில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.
ஆகவே, நிர்வாகத்தின் ஒருதலைப்பட்சமான, எதேச்சையான முடிவை கண்டித்தும், பணிபாதுகாப்பு இல்லாமல் தொழிலாளர்களை அடிமைகளைப் போல் அலட்சியப்படுத்தி இழிவாக பேசிய தொழிற்சாலை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்று தொழிற்சங்கம் முடிவு செய்து அதன்படி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு ஹைடிசைன் தொழிற்சங்க தலைவர் லட்சுமி, செயலாளர் அமுதா, துணைத் தலைவர் கல்பனா, துணைச் செயலாளர் கலையரசி, பொருளாளர் சுமதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இப்போராட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார். தொடர்ந்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, கலியமூர்த்தி ஆகியோர் பேசினார்கள்.
தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, செல்வநாதன், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் செல்வநாதன், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் சுமதி, ஆதிதிராவிட நலக்குழு தலைவர் பழநிசாமி, கலியமூர்த்தி, தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், இராமதாஸ், மிலிட்டரி முருகன், திலகர், மந்திரிகுமார் மற்றும் 100–க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
Comments
Post a Comment