கடலூர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளை பாதுகாப்பாக இயக்கவும், மக்களுக்கு ஏற்படும் அச்ச உணர்வை போக்கிடும் வகையிலும் உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி!
கடலூர் சிப்காட்டில் உள்ள
தொழிற்சாலைகளை பாதுகாப்பாக இயக்கவும், மக்களுக்கு ஏற்பட்டும் அச்ச உணர்வை போக்கிடும் வகையிலும் உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி!
கடலூர் சிப்காட்டில் அமைந்துள்ள டாக்ரோஸ் தொழிற்சாலையில் நேற்றிரவு ஒரு ரியாக்டரில் பிரஷர் அதிகமாகி ரியாக்டரில் உள்ள கண்ணாடி கிளாஸ், பைப் லைன் வெடித்து சிதறி உள்ளது. இதிலிருந்து ரசாயனப் புகை தொழிற்சாலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கும் பரவி உள்ளது. இதனால் மக்கள் பதட்டமும், அச்சமும் ஏற்பட்டதோடு சுவாசிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தலையிட்டு சரி செய்வதற்கான நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் நிலவுகிறது.
இரசாயன தொழிற்சாலைகள் அதிகம் உள்ள கடலூர் சிப்காட் பகுதியில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு சில தொழிற்சாலைகளில் விபத்து ஏற்பட்டு பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு தொழிலாளர்கள் இறக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, சிப்காட் ரசாயன தொழிற்சாலைகளில் ஆபத்தான ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் இரசாயன பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? ரியாக்டர் போன்ற உற்பத்தி சாதனங்களில் உரிய பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா? அனுமதி பெற்றதை விட அதிகமாக ரசாயன பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா? அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக உற்பத்தி நடக்கிறதா? பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்களா? என்பதை மாவட்ட நிர்வாகமும், தொழிற்சாலைகள் ஆய்வகத் துறையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கடலூர், புதுச்சேரி, சென்னை மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மூக்கு, நுரையீரல் பாதிப்பு, சுவாசக் கோளாறுகள் அதிகரித்து வருகிறது.
சிப்காட் தொழிற்சாலைகளினால் பாதிக்கப்படும் மக்கள் பயன்படக்கூடிய வகையில் தொழிற்சாலை நிர்வாகங்கள் சி.எஸ்.ஆர். நிதியிலிருந்து கடலூர் பகுதியில் அதி நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதில் மாவட்ட நிர்வாகமும், தொழிற்சாலைகள் ஆய்வகத் துறையும் தலையிட்டு தொழிற்சாலைகளை பாதுகாப்பாக இயக்கவும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை போக்கிடும் வகையிலும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட குழுவின் சார்பில் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.
Comments
Post a Comment