காஞ்சிபுரத்தில் மருத்துவப் படிப்பு படிவம் வாங்க சென்றுவிட்டு திரும்பிய போது தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கல் மீது இருசக்கரம் மோதி விபத்து: இரு இளைஞர்கள் உயிரிழப்பு! மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை!

காஞ்சிபுரத்தில் மருத்துவப் படிப்பு படிவம் வாங்க சென்றுவிட்டு திரும்பிய போது தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கல் மீது இருசக்கரம் மோதி விபத்து: 
இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை!
ராணிப்பேட்டை, செப்.04- 
ராணிப்பேட்டை மாவட்டம்,  காவேரிப்பாக்கம் அருகே சென்னசமுத்திரம் வேதவல்லி வித்யாலயா தனியார்  பள்ளி அருகே  சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கல் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மற்றொரு இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    வாலாஜாப்பேட்டை சோளிங்கர் ரோடு குணசேகர் என்பவரின் மகன்  கரண்( வயது 21), மற்றும் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் சுபாஷ்( வயது20), மற்றும் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் சரண்குமார்( வயது 22) ஆகிய மூவரும் நண்பர்களான இவர்கள்  காஞ்சிபுரம் வரை மருத்துவ படிவம் வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பிறகு மீண்டும் ஊருக்கு திரும்பிய நிலையில் காவேரிப்பாக்கம் அருகே சென்னசமுத்திரம்  வேதவல்லி வித்யாலயா தனியார் பள்ளி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக தேசிய நெடுஞ்சாலையில் பாதையை மாற்றுவதற்காக வைத்திருந்த தடுப்ப கல் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. 
     விபத்தில் கரண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுபாஷ் மற்றும் சரண்குமார் ஆகிய இருவரும் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இருந்தனர். இதனை அறிந்த பொதுமக்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த பின்னர்  மூவரையும் மீட்டு  ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மருத்துவமனையில் மருத்துவர்கள் சரண்குமார் மற்றும் சுபாஷ் ஆகிய இருவருக்கும் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
    மேலும் சிகிச்சை பலனின்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சுபாஷ் உயிரிழந்தார். மேலும் மற்றொரு இளைஞரான சரண்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments