கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில்" சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வழி காட்டுதல் " நிகழ்ச்சி!

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில்
" சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வழி காட்டுதல் " நிகழ்ச்சி!
 கோவை, செப்.23- கோவை நவ இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின், வேலை வாய்ப்பு, பயிற்சி  நிறுவனத் தொடர்புகள் மையம் சார்பில், “சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் " நிகழ்ச்சி , கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. 
     நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி முதல்வர், செயலர், முனைவர் பி.எல்.சிவக்குமார்  தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார்.
           மாநில வனப் பணிக்கான மத்திய அகாடமியின் வனக் காப்பாளர் முனைவர் சி.வித்யாசாகர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணாக்கர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பேசியதாவது: 
             “சிவில் சர்வீஸ் பணி என்பது நாட்டின் மிக உயரிய பதவியாகும். ஆண்டுக்கு ஒருமுறை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு நடத்தப்படும். பட்டப்படிப்பை முடித்தவர்கள் இத் தேர்வுக்குத் தகுதியானவர்கள்.
இது தகுதித்தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளைக் கொண்டது. தேர்வைப் பொறுத்தவரை அனைத்துப் பாடங்களையும் படிக்க வேண்டும். சரியாகத் திட்டமிட்டு, மனம் தளராமல் படிக்க வேண்டும். 
       இதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற உயர் பொறுப்புகள் மட்டுமின்றி ரெயில்வே, வருமானவரித்துறை, பொருளாதாரம், பொறியியல் உள்ளிட்ட துறைகளின் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்.
சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாரானால் தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் உட்பட அனைத்து  வகையான போட்டித் தேர்வுகளையும் எளிதாக எழுதி, தேர்ச்சியும் பெற்று விட முடியும்” என்றார். 
             தொடர்ந்து, ஜி.எஸ்.டி. நுண்ணறிவுத்துறை இணை இயக்குநர் பிரபாகரன் பேசும் போது, “போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு அடிப்படைத் திறமைகள் தேவை. அதை முறையாகப் பயிற்சி செய்வதன் மூலம் மாணவர்-மாணவியர்கள் எளிதாகப் பெற்று விட முடியும். “தொட்டனைத் தூறும் மணற்கேணி” என்ற வள்ளுவரின் வரிகளுக்கு ஏற்ப, தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். தலைமைப் பண்பின் முக்கியத் தகுதியே முடிவெடுக்கும் திறன் தான். இதை சரியாக எடுப்பவர்களால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். 
       “எண்ணித் துணிக கருமம்” என்ற வரிகளுக்கு ஏற்றார் போல் ஒரு முடிவை எடுத்த பின்னர் அதிலிருந்து பின்வாங்கக்கூடாது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், அதில் தேர்ச்சிப் பெறும் வரை விடா முயற்சியுடன் படிக்க வேண்டும். அதுதான் நம்முடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்” என்றார். 
         பின்னர், சிவில் சர்வீஸ் தேர்வு தொடர்பான மாணவர் - மாணவியர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் பதிலளித்தனர். 
      நிகழ்ச்சியில், அறம் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் எம்.செந்தில்குமார், வேலைவாய்ப்பு, பயிற்சி, நிறுவனத் தொடர்புகள் மைய ஒருங்கிணைப்பாளர்கள் எம்.தாமரைச்செல்வன், முனைவர் ஆர்.ரேகா, டி.கரோலின் ரெபேக்கா உள்பட பேராசிரிய பெருமக்கள், மாணவர், மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Comments