நமது திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு உறுதுணையாக இருந்து நிதி அளித்து வருகிறது: மேலும் கூடுதல் நிதி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது-முதலமைச்சர் ரங்கசாமி...
நமது திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு உறுதுணையாக இருந்து நிதி அளித்து வருகிறது: மேலும் கூடுதல் நிதி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது-முதலமைச்சர் ரங்கசாமி...
புதுச்சேரி, செப்.25-
புதுச்சேரியில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி கடந்த மாதம் துவக்கி வைத்தார். இதற்காக தகுதி வாய்ந்த 70,000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொகுதி வாரியாக இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கதிர்காமம் தொகுதியில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
சண்முகாபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்ற விழாவிற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.பி. ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு அதற்கான கார்டை வழங்கினார்.
உடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மற்றும் தொகுதி முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில், பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மகளிருக்கு எத்தனையோ திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம். தொடங்கிய அத்தனை திட்டங்களும் எல்லோரும் பாராட்டுகின்ற திட்டங்கள் தான். நிறைய திட்டங்களை பெண்கள் பெரும் போது, ஒரு சில பெண்கள் பயனில்லமல் இருப்பதாக தெரிந்தவுடன், அவர்களும் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த குடும்ப தலைவிக்கான ரூ.1000 திட்டம் தொடங்கப்பட்டது.
மேலும், சிலர் நினைக்கலாம். பேசலாம். பணம் இருக்கிறதா? எப்படி கொடுப்பார் என்று. 70,000 குடும்பத்தலைவிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு தொகுதியாக விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. நிதி உள்ளது என்றார். மேலும், 60 பெண் குழந்தைகளுக்கு கடந்த மாதம் 50,000 ரூபாய் போடப்பட்டுள்ளது. மீதமுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு வருகிறது. விரைவில் போடப்படும்.
விபத்து காப்பீட்டு திட்டத்திற்கு நிதி முழுவதும் அரசு செலுத்திவிட்டது. அந்த திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கேஸ் மானியத்திற்கு 8 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் யார் என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம். அவை முழுவதுமாக கிடைத்தவுடன் கேஸ் மானியம் உடனடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றார்.
மேலும் தகுதியை மீறி ஏன் தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறீர்கள். அரசு பள்ளியில் படித்து வந்தால் நன்றாக படிக்கும் பிள்ளைகள் எந்த செலவும் இல்லாமல் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிக்க முடியும்.
மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கான அந்த பணம் முழுவதையும் அரசே செலுத்திவிடும். பணம் கட்டி படிச்சாதான் போக முடியும் என்றால் போக வேண்டாம். நிறைய அரசு பள்ளிகள் உள்ளது. அதில் சேருங்கள் படிக்கலாம் என்றார்.
நமது திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு உறுதுணையாக இருந்து நிதி அளித்து வருகிறது. மேலும் நிதி கேட்டுள்ளோம். அதை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
Comments
Post a Comment