சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!
சோனா வள்ளியப்பா கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
B பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ஜெகன்நாதன் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முனைவர் சொக்கலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் காதர்நவாஷ் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். சோனா கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செய்தனர்.
Bஇதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் 2019-2022 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற 600 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களையும், 13 பேராசிரியர்களுக்கு முனைவர் பட்டங்களையும் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
சோனா கல்விக்குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா பேசும்பொழுது, கல்வியால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். அதை சோனா கல்விக்குழுமம் சிறப்பாகச் செய்து வருகிறது. இதை பயன்படுத்தி மாணவர்கள் தங்களை உயர்த்தி கொள்கின்றனர். தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி கொண்டு இன்னும் பல நிலைகளை அடைய வேண்டும் என்று மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முனைவர் சொக்கலிங்கம், கடின உழைப்பும், அறம் சார்ந்த வாழ்வும் ஒவ்வொருவரையும் வாழ்க்கையின் உயரிய நிலையை அடையச் செய்கிறது. மாணவர்கள் தங்கள் கல்லூரியில் வளர்த்துக் கொண்ட அறிவையும், திறமைகளையும் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். எவர் ஒருவர் தனது வாழ்நாள் முழுக்க கற்றலில் ஈடுபாடு கொள்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியடைய முடியும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறி வாழ்த்தினார்.
மேலும், சோனா கல்விக்குழுமம் சார்பில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்கலைக்கழகத் தர வரிசையில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு தலா 7500 ரூபாயும், மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும், மற்ற தர வரிசை பெற்ற மாணவர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. மொத்தம் 1,31,000 ரூபாய் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக அளவில் தொடர்ந்து இரண்டாவது முறையும் வணிகவியல் மற்றும் உயிர் தொழில் நுட்பவியல் மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பது துறையில் தர வரிசை பெற்ற 28 மாணவர்களுக்கும் சோனா கல்விக்குழுமத்தின் சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
2019-2022 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்றதுடன் 311 மாணவர்கள் தனிச் சிறப்புடன் கூடிய முதல் நிலை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பட்டமளிப்பு விழாவின் நிறைவாக கல்லூரியின் முதல்வர் உறுதிமொழி வாசிக்க, தாங்கள் கற்ற கல்வி நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் என்றும் உறுதியுடன் செயல்படுவோம் என்று மாணவ மாணவியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
Comments
Post a Comment