காட்டுமன்னார்கோவில், ஆக.21-கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் முட்டம் மற்றும் தில்லைநாயகபுரம் கிராமத்தில் நடந்தது.
காட்டுமன்னார்கோவில் ரோட்டரி சங்கம், பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜோதி கண் பராமரிப்பு மையம் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடத்தின.
முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் ம.எழில் சிவா தலைமை தாங்கினார்.
ரோட்டரி சங்க உறுப்பினர்கள் செல்வராஜ், ஆசிரியர் சேவியர், கெளதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் முட்டம், மாதர் சூடாமணி, தில்லைநாயகபுரம், மா.உடையூர் ஆழங்காத்தான் கிராமத்தில் இருந்து 1000-த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து கண் சிகிச்சை மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
இதில் 200க்கும் மேற்பட்டோர் கண்புரை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச உணவு, தங்கும் அறை, போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட்டது. இதனால் ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள்
பழனிவேல், இராஜேந்திரன், சங்கர், ஊராட்சி மன்ற உறுப்பினர் சிவக்குமார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.