கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
சுதந்திர தினவிழா கொண்டாட்டம்! கோலாகலம்!!
கோவை, ஆக.16-கோவை நவ இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில், நாட்டின் 77-வது சுதந்திர தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, கல்லூரி முதல்வர் - செயலர், முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை தாங்கினார்.
மேலும், சிறப்பு அழைப்பாளராக தேசிய மாணவர் படையின் கோவை தலைமையிட குரூப் கமாண்டர் கர்னல் பி.வி.எஸ். சிவராவ் கலந்து கொண்டு, தேசியக் கொடியேற்றி வைத்து தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், பேண்ட் வாத்திய இசைக் குழுவின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு மாணவர் - மாணவியர்கள் மத்தியில் பேசியதாவது:
“உலகில் உள்ள எல்லா நாடுகளைக் காட்டிலும், அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. நாட்டை வழி நடத்தும் கடமை இளம் படையினருக்கு உள்ளது. இதற்கு நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். இதே போல் உலக அளவில் இந்தியா பொருளாதாரத்தில் மூன்றாவது நாடாக கூடிய விரைவில் மாறும்.
ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15, ஜனவரி 26 ஆகிய தேதிகள் மட்டும் நாட்டுப் பற்றைக் கொண்டாடக்கூடிய தினங்கள் அல்ல. ஆண்டு முழுமைக்கும் போற்றப்பட வேண்டியவை. நமக்கு நாடு தான் முக்கியம். பல்வேறு இனம், மொழி, பண்பாடு, பாரம்பரியம் என இருந்தாலும், நாம் அனைவரும் இந்தியர்கள். ஒற்றுமையே பலம். ஒழுக்கமே நமது முன்னேற்றம். இவை இரண்டும் நம் இந்திய இளைஞர்களை வழி நடத்தும் முக்கியப் பண்புகள் ஆகும்” என்றார்.
தொடர்ந்து, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறந்து விளங்கும் மாணவர்- மாணவியர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. பின்னர், மாணவர், மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், 6 தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி கமாண்டிங் ஆபீசர் மேஜர் பி.அசோக்குமார், தேசிய மாணவர் படை அலுவலர்கள், கல்லூரி இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரிய பெருமக்கள், மாணவர், மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மாணவர் மன்றத் தலைவர் எம்.வர்ஷினி அனைவரையும் வரவேற்றார். மாணவர் மன்றத் துணைத் தலைவர் பி.நிதேஷ் கிருஷ்ணா நன்றி கூறினார்.
Comments
Post a Comment