தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டுமென குடும்பத்தினர் மற்றும் தேவேந்திர பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு கவர்னரிடம் மனு.

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு  நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டுமென குடும்பத்தினர் மற்றும் தேவேந்திர பண்பாட்டுக் கழகத்தினர் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை.
ராமநாதபுரம், ஏப்.20-தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி,  2 நாட்கள் அரசு சுற்றுப் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து பல்வேறு பகுதிகளுக்கும் கொளுத்தும் வெயிலையும் பாராது சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
     அதனடிப்படையில், 18-ந் தேதி செவ்வாய் ராமேஸ்வரம் கேந்திர வித்யாலயா பள்ளியில் பயிலும் மாணாக்கர்கள், ஆசிரிய பெருமக்களுடன் கலந்துரையாடினார்.
          தொடர்ந்து மாலையில், தேவிபட்டிணத்தில் மீனவர்களுடன் சந்தித்து உரையாடினார்.
19-ந் தேதி புதன்  எட்டிவயலில் உள்ள விவசாயப்பண்ணையை பார்வையிட்டார். பின்பு, உத்திரகோசமங்கையில் வீற்றிருக்கும் அருள்மிகு மங்களநாதர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
             தொடர்ந்து, பிற்பகல் 03.33 மணியளவில் பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை பின்புறம் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து, ரோஜா மலர் தூவி மரியாதை செய்தார்.
              அது சமயம், தியாகி இமானுவேல் சேகரனின் குடும்பத்தினர்களான மகள் சுந்தரி பிரபா ராணி உள்பட குடும்பத்தினர்கள், பரமக்குடி தேவேந்திர பண்பாட்டுக்கழகத் தலைவர் பரம்பை பாலா தலைமையில் நிர்வாகிகள் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தி கூறியதாவது :
              கோரிக்கை மனுவில், தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.
                பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
                  நினைவு இடத்தில் அன்னாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
              பரமக்குடி நகரின் நுழைவு  வாயிலில் அமைக்கப்பட்டுவரும் ரவுண்டானாவில் தியாகி இமானுவேல் சேகரனின் வெண்கல திரு உருவ சிலை அமைக்க வேண்டுமென கூறியுள்ளனர்.
             நிகழ்ச்சியில், அவரது சொந்த கிராமமான செல்லூரைச் சேர்ந்த தலைவர் சங்கரபாண்டி, செயலாளர் ஜீன்ராஜா மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞர் மன்றத்தினர் உள்பட சுற்றுப்புற கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புல்வாய்குளம் கிராமத்தின் சார்பில் பட்டியலில் இருந்து வெளியேற்ற கோரிக்கை மனு அளித்தனர்.
          செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட வருவாய்துறை - காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
              இவரது வருகையையொட்டி, சந்தைப்பேட்டை பகுதி, அரசு போக்குவரத்து கழக பணிமனை பகுதி, நினைவிடப் பகுதி, ரயில்வே கேட் உள்பட சுற்றுப்பகுதிகளில் போலீஸார்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
              தொடர்ந்து, கமுதி-பசும் பொன்னில் அமைந்துள்ள தேவர் திருமகனார் நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார்.

Comments