மதுரை மாநகருக்கு மெருகூட்டும் திருமலை நாயக்கர் மகால்!!!

மதுரை மாநகருக்கு மெருகூட்டும் திருமலை நாயக்கர் மகால்!!!
மதுரை, மார்ச் 26-
தமிழகத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட பொதுமக்கள் கண்டு பொழுது போக்க மிருகக்காட்சி சாலை, அணைகள், வழிபாட்டு ஸ்தலங்கள், கடற்கரைகள், பூங்காக்கள் என பல்வேறு இடங்கள் இருந்து வருகிறது.
          இந்திய மக்கள் மட்டுமல்ல அயல்நாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்லக் கூடிய இடம் மதுரை மாநகரம். மதுரை மாநகரம் என்றாலே மீனாட்சியம்மன் கோவில் என பச்சிளங் குழந்தை கூட தூக்கத்திலும் சொல்லக் கூடிய இடம். அதற்கு அடுத்தாற்போன்று திருமலை நாயக்கர் மகாலும், தெப்பக்குளமும் பிரசித்தி பெற்றது. மதுரைக்கு வந்தவர்கள் இந்த 3 இடங்களையும் பார்க்காமல் செல்வது இல்லை என்றளவிற்கு பெயர் பெற்றது.
      தொல்லியல் துறையினரால் பராமரிப்பு மேற்கொண்டுவரும் திருமலை நாயக்கர் மகாலை அன்றாடம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டு ரசித்து செல்வதை கண்கூடாக காண முடியும். மக்களின் பொழுது போக்கு இடமாக மட்டும் அல்லாமல் மகாலினுள் தொல்லியல் துறையினரால் நிறுவப்பட்டுள்ள அருங்காட்சியகமும், பழங்கால சிற்பங்களும், உற்றுநோக்கும் கட்டிட கலையையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
     திருமலை நாயக்கர் மகால்
 கி.பி.1623 -ல் இருந்து 1659 - வரை மதுரையைத் தலைநகராகக் கொண்டு சீரும், சிறப்பாக ஆண்ட திருமலை நாயக்கரால் இந்த அரண்மனை கட்டப்பட்டது. தென் இந்தியாவிலேயே எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்தது இதுவே.
      அரண்மனையின் பல பகுதிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதில் சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என்று இரண்டு முக்கிய பகுதிகள் இருந்தன. இதைத் தவிர பதினெட்டு வித இசைக் கருவிகள், இசைக்கும் இடம், பூசை செய்யும் இடம், அரியணை  மண்டபம், தேவியரின் அந்தப்புரம், நாடக சாலை, உறவினரும் - பணி செய்பவரும் வசிக்கும் இடம், வசந்த வாலி, மலர்  வனங்கள் முதலியனவும் இருந்தன.
                 திருமலை நாயக்கர் சொர்க்க விலாசத்திலும், அவர் தம்பி முத்தியாலு நாயக்கர் ரங்க விலாசத்திலும் வாழ்ந்தனர். இப்பொழுது எஞ்சியுள்ள சொர்க்க விலாசம் பகுதியில் தொல்லியல் துறையினரின் மேற்பார்வையில் நிறுவப்பட்டுள்ள அருட்காட்சியகத்தில் முதுமக்கள் தாழி உள்பட பழங்கால பொருட்கள், சிற்பங்கள் அமைந்து பார்வையாளர்களின் கண்களையும், மனதையும் சுண்டி இழுத்து வருவதை நாமும் அறிவோம்.

Comments